பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்தும் அரசியல் பிரமுகர்: வீடியோ வெளியானதால் சர்ச்சை!

தடுப்பூசி முகாமில் பெண் ஒருவருக்கு கோவிட்-19 தடுப்பூசியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் செலுத்தும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் வேகம் எடுத்து வருகிறது. ஏற்கனவே தடுப்பூசி மீதான அச்சம் நிலவியதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது, இருப்பினும் இரண்டாம் அலை பரவலுக்கு பின்னர் தடுப்பூசி மீதான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டு பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலம், பஸ்சிம் பர்தமான் மாவட்டத்தின் குல்தி அருகேயுள்ள சிதாராம்பூர் கிராமத்தில் தடுப்பூசி முகாம் ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் அசான்சோல் நகராட்சியின் முன்னாள் பெண் மேயரும், அப்பகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான தபசும் ஆரா என்பவர் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அங்கு மருத்துவ குழு முன்னிலையில் ரூபியா மகதொ என்ற பெண் பயனாளி ஒருவருக்கு திடீரென தடுப்பூசி செலுத்துவது போல வீடியோவுக்காக பாவலா செய்தார் முன்னாள் மேயர் தபசும் ஆரா.

தபசும் ஆரா பெண் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்துவது போல எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகியது. எந்தவித மருத்துவ அனுபவமும், தகுதியும் இல்லாத ஒரு அரசியல் தலைவர் இது போல எப்படி செய்ய முடியும் என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர். மேலும் அம்மாநில எதிர்கட்சியான பாஜகவினரும் முன்னாள் பெண் மேயரின் செயலை கண்டித்துள்ளனர்.

 

தபசும் ஆரா

பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான பபுல் சுப்ரியோ ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இது போன்ற கட்சி நிர்வாகிகள் மேற்குவங்க அரசின் கட்டுக்குள் இல்லை என்பதை போல தோன்றுகிறது.

நகராட்சி நிர்வாக அமைப்பின் உறுப்பினரான தபசும் ஆரா, மக்களுக்கு தானே தடுப்பூசி போட்டு நூற்றுக்கணக்கான உயிர்களைப் பணயம் வைத்துள்ளார் … அவரது அரசியல் பின்புலம் கடுமையான தண்டனையிலிருந்து அவரைக் காப்பாற்றுமா?” என முதல்வர் மம்தா பானர்ஜியை டேக் செய்து பபுல் சுப்ரியோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனையடுத்து தான் யாருக்கும் தடுப்பூசி போடவில்லை என்றும் விழிப்புணர்வுக்காகத்தான் அவ்வாறு செய்ததாகவும் தபசும் ஆரா விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் இது குறித்து அறிக்கை கேட்டிருப்பதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Contact Us