75 நாட்கள் பிணவறையில் வைக்கப்பட்ட கணவரின் சடலம்! – மனைவி பகீர் வாக்குமூலம்!

கொரோனாவால் உயிரிழந்த தனது கணவரின் சடலத்தை 15,000 ரூபாய் கட்டண பாக்கி தராததால், கடந்த 75 நாட்களாக பிணவறையில் மருத்துவமனை நிர்வாகத்தினர் வைத்திருப்பதாக மனைவி கூறியிருக்கும் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரேஷ். 29 வயதாகும் நரேஷ் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து மீரட்டில் உள்ள லாலா லஜுபத் ராய் மெமோரியல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே இளைஞர் நரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து அவருடைய மனைவிக்கு தகவல் தெரிவிக்கவே, அவர் பஸ்தியிலிருந்து மீரட்டுக்கு கணவரின் உடலை வாங்கிச் செல்வதற்காக வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை கட்டணத்தில் 15,000 ரூபாய் பாக்கி இருப்பதாகவும் அதனை செலுத்திவிட்டு உடலை வாங்கிச்செல்லுமாறு அவரிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்ததாக கூறுகிறார் அவரின் மனைவி. இருப்பினும் தன்னிடம் அந்த தொகை இல்லை என மனைவி கூறியதற்கு, பணத்தை கட்டினால் தான் உடலை தருவோம் என கூறி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பிணவறையில் தனது கணவரின் உடலை வைத்திருப்பதாக அவருடைய மனைவி குற்றம்சாட்டினார்.

இருப்பினும், மருத்துவமனை நிர்வாகத்தினர் அப்பெண்ணின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளனர். அந்த மருத்துவமனையில் பிணங்களை கையாளும் துறையைச் சேர்ந்த மருத்துவர் தீக்‌ஷித் கூறுகையில், நரேஷ் மற்றும் அவரது சகோதரர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நரேஷ் ஏப்ரல் 15ம் தேதி உயிரிழந்திருக்கிறார். அவருடைய சகோதரர் விஜய் தந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டோம், ஆனால் அது ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. தொடர்ந்து பிணவறையில் இருந்த நரேஷின் உடலை யாரும் பெற்றுக்கொள்ள வராததாலும் அங்கு போதிய இடம் இல்லாததால் ஹப்பூர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இது குறித்து காவல்நிலையத்திலும் தெரிவித்தோம். விஜய் தந்த நம்பரை தொடர்ந்து ஆராய்ந்து விசாரித்து உயிரிழந்த நரேஷின் மனைவி குடியாவை ஹப்பூருக்கு அழைத்து வந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அவருடைய கணவரின் உடலை தகனம் செய்திருக்கின்றனர் என்றார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக குழு ஒன்றை அமைத்திருப்பதாக மீரட் மாவட்ட மேஜிஸ்திரேட் பாலாஜி தெரிவித்தார்.

Contact Us