மயானத்தில் உயிர் பிழைத்த அதிசய குழந்தை; பின்பு காத்திருந்த பெரும் அதிர்ச்சி!

குழந்தை உயிருடன் இருப்பதை அறியாமல் மருத்துவர்களின் இறந்துவிட்டதாக கூறியதால், மயானத்திற்கு அடக்கம் செய்ய சென்ற போது குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்த உறவினர்கள் மீண்டும் மருத்துவமனைக்கே கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், அக்குழந்தை இன்று உண்மையிலேயே உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து உயிரிழந்த 6மாத சிசுவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால், மத வழக்கப்படி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பிளவேந்திரராஜா. இவருடைய மனைவி பாத்திமா மேரி 6 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு பனிக்குடம் அடைந்ததாக கூறப்படுகிறது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலையில் அவருக்கு 700 கிராம் எடையில் பெண் குழந்தை பிறந்தது. நீண்ட நேரமாகியும் உடலில் அசைவுகள் இல்லாததால் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறந்ததாக கூறிய குழந்தையை பெற்றோர் பார்க்க விரும்பாததால் அதனை உறவினர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைத்தனர்.

கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்ய இருந்த நிலையில், குழந்தையின் உடலில் அசைவுகள் இருந்ததால் மீண்டும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டது. அங்கு பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த குழந்தை இன்று காலை உயிரிழந்தது.

இதையடுத்து ஆண்டிபட்டி வட்டாட்சியர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆகியோர் முன்னிலையில் குழந்தையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் மத வழக்கப்படி குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

மயானம் வரை சென்ற குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்த பெற்றோர்கள், மகிழ்ச்சியடைந்த நிலையில், அக்குழந்தை உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us