மாமன் மகன்களுடன் பேசியதால் ஆத்திரம்… பெண்களை கொடூரமாக தாக்கிய குடும்பத்தினர்!

மத்திய பிரதேச மாநிலம், பிபல்வா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின சகோதரிகள் இருவர் தங்களது மாமன் மகன்களுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த அவர்களின் குடும்பத்தினர், அந்த இளம் பெண்களை காட்டுமிராண்டித் தனமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

பெண்களின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி, இரண்டு, மூன்று ஆண்கள் சரமாரியாக அடித்து சித்ரவதை செய்துள்ளனர். தப்பிக்க முயன்ற போதும், விடாமல் துரத்தி துரத்தி கம்புகளால் தாக்கி உள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலை அப்பகுதி மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். ஆனால், யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. அதேசமயம், தாக்குதல் நடந்ததை சிலர் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த வீடியோக்கள் வைரலாகின.

இந்த கொடூர சம்பவம் ஜூன் 22ம் தேதி நடந்துள்ளது. வீடியோக்கள் பரவியதை அடுத்து போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர்.

இதேபோன்று சமீபத்தில் ஒரு பெண் தன் மாமியார் வீட்டை விட்டு வெளியேறி வந்ததற்காக அப்பெண்ணைப் பெற்றோர்கள் மற்றும் சகோதரர்களே மரத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Contact Us