புதுக்கட்சி துவங்குகிறார் ஜெகன்மோகன் தங்கை ஷர்மிளா! – அரசியல் ஆலோசகராக திமுக எம்.எல்.ஏ மகள்?

ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் 2011-ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியைத் தொடங்கினார். அதன் பிறகு ஜெகன்மோகனுக்கு ஆந்திராவில் தனது தந்தையின் செல்வாக்கை மீட்டெடுத்து, மக்களிடம் தனது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை முழுமையாகக் கொண்டு போய் சேர்க்கக் கிட்டத்தட்ட 8 வருடகாலங்கள் அவருக்கு தேவைப்பட்டது. ஒருவழியாக 2019 சட்டமன்றத் தேர்தலில் பலமான பிரச்சார வியூகங்கள், தந்தை ராஜசேகர ரெட்டியின் செல்வாக்கு ஆகியவை ஒருசேரக் கைகொடுத்ததால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றிவிட்டு ஜெகன்மோகன் அரியணை ஏறினார். ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் தனிக்கட்சி தொடங்கிய நேரத்தில் அக்கட்சி மாநிலம் முழுவதும் சென்றடைய முக்கிய காரணமாக இருந்தவர் அவரது இளைய சகோதரி ஷர்மிளா.

ஆளுங்கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் செயல்பாடுகள் குறித்து மாநிலம் முழுவதும் பயணித்து எளிமையாகப் பிரசாரம் செய்து ஷர்மிளா மக்கள் மனதில் மாற்றத்தின் விதையைத் தூவினார். குறிப்பாக, கடந்த தேர்தலில் தனது சகோதரர் ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரித்து ஷர்மிளா மேற்கொண்ட மாபெரும் பாதயாத்திரை ஆந்திரத்தில் ‘ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்’ என்ற கட்சியை மக்களிடம் முழுமையாகக் கொண்டு சேர்த்தது. அதன் பயனாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 2019 தேர்தலில் வெற்றிவாகை சூடியது. ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்த ஜெகன்மோகன் அதற்குப் பிறகு தெலங்கானா பக்கம் தனது கவனத்தை முற்றிலுமாக குறைத்துக் கொண்டார்.

முன்னதாக, ஆந்திரப் பிரதேசம் என்ற ஒற்றைக் குடையின் கீழ் இருந்த மாநிலம், 2014-ல் ஆந்திரா – தெலங்கானா என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஆனால், 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆந்திர மாநிலத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தது. அதன் காரணமாக, அக்கட்சிக்குத் தெலங்கானாவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் செல்வாக்கு இல்லாமல் போனது. தன் தந்தையின் காலத்தில் தெலுங்கானாவில் அவருக்கு இருந்த செல்வாக்கு தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கு இல்லை என்பதை மிகத்தெளிவாகப் புரிந்துகொண்ட ஷர்மிளா, தனது அரசியல் பயணத்தைத் தெலங்கானாவின் பக்கம் திருப்பினார்.

2019 ஆந்திர சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி செயல்பாடுகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்த ஷர்மிளா, கடந்த சில மாதங்களாகவே வலுவான எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த கட்சிகளும் இல்லாத தெலங்கானாவில் புது கட்சி தொடங்கி அம்மாநிலத்தில் தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் செல்வாக்கை மீண்டும் மீட்டெடுக்கத் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். தெலங்கானாவில் 2023-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஷர்மிளா தனிக்கட்சி தொடங்கி அரசியலில் இறங்குவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ஷர்மிளா கடந்த ஏப்ரல் மாதம் தெலங்கானாவில் பிரமாண்ட பேரணி நடத்தினார். அதைத் தொடர்ந்து கம்மம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும் புதிய கட்சி தொடங்குவது குறித்தும் அறிவித்தார்.

தன் தந்தை ராஜசேகர ரெட்டியின் நல்லாட்சியை தெலங்கானாவிலும் தர விரும்புவதாகக் கூட்டத்தில் பேசிய ஷர்மிளா, இம்மாதம் (ஜூலை 8-ம் தேதி) ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளில் புது கட்சி ஒன்றினை தொடங்க உள்ளதாக அறிவித்தார். தன்னுடைய அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையில் இல்லாமல், தன்னுடைய தலைமையில் தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைப் போன்றே ஒரு கட்சியை ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது ஷர்மிளாவின் திட்டமாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது. அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டியுடனான மனக் கசப்பின் காரணமாகத் தான் ஷர்மிளா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸிலிருந்து மறைமுகமாக விலகி தெலங்கானாவில் தனிக் கட்சி தொடங்குவதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் ஷர்மிளாவின் அரசியல் வியூகம் முற்றிலும் மாறாகவே இருக்கிறது.

ஆந்திரா பிரிக்கப்பட்டு தெலங்கானா என்ற மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டதிலிருந்து நதிநீர் பங்கீடு விவகாரத்தில் பங்காளிகளான இரு மாநிலங்களும் பகையாளிகளாக மாறி மோதல் போக்கைக் கடைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. எனவே, இந்த சூழலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸை வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைப்பது தண்ணீரில் கோலம் போடுவதற்குச் சமம் என்பதால், ஷர்மிளா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அல்லாத – ஆனால், தந்தை ராஜசேகர ரெட்டி வழியிலான புது கட்சியை தொடங்க முடிவெடுத்திருக்கிறார். எனவே தான், ஷர்மிளா தனது ஆதரவு திரட்டும் பயணத்தின் போது கூட ‘தெலங்கானாவுக்குச் சொந்தமான ஒரு சொட்டு நீர் கூட ஆந்திராவுக்கு சென்று விடக் கூடாது..அதை நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்’ என்று சூளுரையாற்றிக் கொண்டிருந்தார். எப்படியாவது, தன்னை தெலங்கானாவின் மண்ணின் மகள், தன் கட்சி தெலங்கானா மக்களுக்கானது என்பதை மக்கள் மனதில் பதிய வைக்க ஷர்மிளா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் கட்சி குறித்த அறிவிப்பினை அறிவித்த கையோடு, ஷர்மிளா தெலங்கானா முழுவதும் பயணித்து கட்சிக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பது, மக்களைச் சந்தித்து ஆதரவைத் திரட்டுவது எனப் புயலாய் சுழன்று கொண்டிருந்தார். இந்நிலையில், ஷர்மிளா அறிவித்தது போல அவர் தந்தை ராஜசேகர ரெட்டியின் பிறந்தநாளான இன்று தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மண்டப வளாகம் ஒன்றில் கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் கட்சியைத் தொடங்கவிருக்கிறார். இன்று மாலை 3 மணிக்கு ஷர்மிளா தனது கட்சியின் கொடி, நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகக் கூட்டத்தில் திரளான தொண்டர்கள் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொள்வதாக தெரியவில்லை. ஆனால், அவரின் தயார் விஜயம்மா கலந்து கொண்டு கட்சி கொடியை அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தனது புதிய கட்சிக்கு அரசியல் உத்தி வகுப்பாளராகச் சேலம் வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரனின் மகள் பிரியாவை நியமித்திருப்பதாக தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சோசியல் மீடியா ஸ்ட்ரேட்டஜிஸ்ட்டான பிரியா ராஜேந்திரன் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் தலைமையில் திமுக-வுக்கு தேர்தல் பிரச்சார வியூகம் வகுத்துக் கொடுத்து ஐபேக் குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்தார். இந்த சூழலில், பிரியா ராஜேந்திரன் ஷர்மிளாவை அவருடைய இல்லத்தில் அண்மையில் சந்தித்துப் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், பிரியா ராஜேந்திரன் தரப்பிலிருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று கட்சி தொடங்கவிருக்கும் ஷர்மிளாவின் திட்டங்களும், அரசியல் வியூகங்களும் பலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்த்தாக வேண்டும்..!!

Contact Us