திருமண நிகழ்ச்சியில் விருந்தினர்கள் முன்னிலையில் மணமகனை செருப்பால் அடித்த தாய்: வைரல் வீடியோவின் சுவாரஸ்ய பின்னணி!

திருமண நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் போது மணமேடையின் மணமகளின் அருகில் இருந்த மணமகனை விருந்தினர்கள் முன்னிலையில் அவருடைய தாயார் திடீரென செருப்பால் அடித்த சம்பவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக மாறியிருக்கிறது. ஆனால் மணமகனை எதற்காக அவரது தாயாரே செருப்பால் அடிக்க வேண்டும் என கேள்வி எழுகிறதா?

திருமணம் என்பது இருமணங்கள் ஒன்றாக இணையும் வைபவம், இரு வீட்டாரின் சங்கமம். இது போன்றதொரு நாளில் இருவீட்டாரும் உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்களுடன் மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் சில நேரங்களில் திருமண வீடு, கலவர வீடாக மாறிவிடும் நிகழ்வுகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால் அதற்கு உறவினர்களாலோ அல்லது வேறு யாரேனும் நபர்களோ தான் காரணமாக இருக்க முடியும், சற்று விநோதமாக திருமணம் நடக்கவிருந்த மணமகனின் தாயாரே அவரை விருந்தினர்கள் முன்னிலையில் திடீரென செருப்பால் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தின் சுமெர்பூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ திருமண விழா ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுழலும் மேடை ஒன்றின் மீது மணமகனும், மணமகளும் அமர்ந்திருக்க அவர்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். அப்போது புகைப்பட கலைஞர்களும், வீடியோ கேமராமேன்களும் திருமண விழாவை படம்பிடித்துக் கொண்டிருந்தனர். மணமகனும், மணமகளும் இருந்த சுழலும் மேடைக்கு படி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

அந்தப் படிகளில் இருந்தவாறு தான் நிகழ்ச்சிகளை கேமராமேன்கள் படம்பிடித்துகொண்டிருந்தனர். திடீரென அவர்களை விலக்கி விட்டு மேடையேறிய ஒரு பெண், மணமகனை நெருங்க முற்பட்டார். அவரது முகத்தை முழுவதுமாக அவர் மூடியிருந்ததால் அவர் யாரென தெரியவில்லை. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென மணமகன் மீது செருப்பை கழற்றி வீசியிருக்கிறார். பின் அவரை சரமாறியாக வசைபாடியிருக்கிறார். மேலும் அந்த சுழலும் மேடையையும் சேதப்படுத்தியிருக்கிறார். இந்த மொத்த நிகழ்வையும் அங்கு கூடியிருந்த விருந்தினர்கள் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அதன் பின்னர் தான் தாக்குதலில் ஈடுபட்டவர் மணமகனின் தாயார் என தெரியவந்தது.

காரணம் என்ன?

அந்த திருமண ஜோடிகள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். மாப்பிள்ளை வீட்டாரின் சம்மதம் இன்றி இத்திருமணத்தை பெண்ணின் தந்தையே நடத்தி வைக்க நினைத்திருக்கிறார். எதிர்ப்பு காரணமாக அவர் மணமகனின் வீட்டார் யாரையும் திருமணத்துக்கு அழைக்கவில்லை.

தனது மகன் வேறு சாதியில் ஒரு பெண்ணை அதுவும் தங்களது சம்மதம் இன்றி திருமணம் செய்து கொள்வதை பொறுக்கமுடியாமல் அவருடைய தாயார் இந்த செயலில் ஈடுபட்டிருக்கிறார்.

திருமணத்துக்கு வந்திருந்த ஒரு விருந்தினர் இந்த மொத்த சம்பவத்தையும் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Contact Us