பெரும் பரபரப்பு; வீடு புகுந்து ஜனாதிபதி சுட்டுக்கொலை!

ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனல் மோயிஸ் அவரது வீட்டில் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்று தான் ஹைதி. இங்கு அதிபராக ஜோவெனல் மோயிஸ் உள்ளார். ஜோவெனல் மோயிஸ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் அவருக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது.

எனவே அவரை பதவி விலகக்கோரி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே அதிபர் மோயிஸ் பதவிக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில், தாமதாக பதவியேற்று கொண்டதால் மேலும் ஒராண்டு காலம் பதவியில் நீடிக்கப் போவதாக அறிவித்தார். அதிபரின் இந்த அறிவிப்பு மக்களிடையே மேலும் எதிர்ப்புகளை கிளப்பி உள்ளது.

இதனிடையே அதிபர் ஜோவெனல் இன்று போர்ட்டொ பிரின்ஸ் நகரில் உள்ள அவரது தனியார் குடியிருப்பு வளாகத்திற்குள் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரது மனைவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தகவலை ஹைதி நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் உறுதிப்படுத்தியுள்ளார். இதை, ‘மனித தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான செயல்’ என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அரசாங்கத்தை தொடர்ந்து வழிநடத்தவும் தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

Contact Us