சினிமா பட பாணியில் பிணத்துக்கு 2 நாள் சிகிச்சை அளித்து பணம் பறித்த டாக்டர்!

சினிமா பட பாணியில் உயிரிழந்த பெண்ணிற்கு 2 நாட்களாக சிகிச்சை அளித்து பணம் பறித்தது அம்பலமாகி உள்ளது. இது தொடர்பாக டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் இஸ்லாம்புர் பகுதியை சேர்ந்த 60 வயது பெண் உடல்நல பாதிப்பால் கடந்த பிப்ரவரி மாதம் அங்குள்ள ஆதார் ஹெல்த்கேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அந்த பெண்ணிற்கு டாக்டர் யோகேஷ் என்பவர் சிகிச்சை அளித்து வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி அப்பெண் உயிரிழந்துள்ளார். ஆனால் இதை டாக்டர் யோகேஷ் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை. மேலும் 2 நாட்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறி அதற்கான கட்டணத்தை பெற்று உள்ளார். பின்னர் 10-ந் தேதி அந்த பெண் உயிரிழந்ததாக கூறி உடலை அவரது மகனிடம் ஒப்படைத்தார். உடலை பெற்ற குடும்பத்தினர் இறுதி சடங்கு நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் பெண்ணின் மகன் இறப்பு சான்று பெற மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். சான்றிதழில் அப்பெண் 8-ந்தேதி உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை கண்ட பெண்ணின் மகன் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி விசாரிக்க டாக்டர் யோகேசிடம் சென்றார்.

அங்கு அவர் சரிவர பதிலளிக்காததால் சந்தேகம் அடைந்த பெண்ணின் மகன் சம்பவம் குறித்து டாக்டருக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரை போலீசார் அரசு மருத்துவமனையின் மருத்துவ வாரியத்திற்கு அனுப்பி விசாரித்தனர். மருத்துவ வாரியத்தினர் நடத்திய விசாரணையில், முரண்பாடு கண்டறியப்பட்டது. மேலும் கூடுதல் கட்டணம் பெறப்பட்டதும் தெரியவந்தது. இதனால் 2 நாட்களாக பிணத்துக்கு சிகிச்சை அளித்து பணத்தை கறந்ததாக தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் யோகேசை கைது செய்தனர். ரமணா பட பாணியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Contact Us