நகை கொள்ளை போனதாக நாடகமாடிய அழகுநிலைய உரிமையாளர் தற்கொலை கைதான கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். (வயது 44). கோவை மாவட்டம் சோமனூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கங்காதேவி (39). இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் பெங்களூருவில் படித்து வருகிறார்.

கங்காதேவி தனது வீட்டின் அருகே அழகுநிலையம் நடத்தி வந்தார். கடந்த 6-ந் தேதி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் கணவர் சீனிவாசன் அழகுநிலையம் சென்று மனைவியை அழைத்து வர போனார். அங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்ட நிலையிலும் கங்காதேவி இருந்தார்.

இதுகுறித்து விசாரித்தபோது 3 கொள்ளையர்கள் தன்னை கட்டிப்போட்டுவிட்டு 19 பவுன் நகையை கொள்ளையடித்ததுடன், அவர்கள் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாகவும் அழுதபடியே கங்காதேவி கூறினார்.

போலீசில் புகார்

இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்துவிடுவோம் என்று சீனிவாசன் கூறியுள்ளார். ஆனால் கொள்ளையர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால், வெளியே தெரிந்தால் நமக்கு தான் அசிங்கம் என்று கங்காதேவி கூறினார்.

ஆனால் சீனிவாசன் போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அழகுநிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கங்காதேவியையும் அழகு நிலையத்துக்கு வந்து கொள்ளை நடந்த விவரங்களை கூறுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதற்கிடையே வீட்டிற்கு சென்ற கங்காதேவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது கடந்த மாதம் கங்காதேவியின் செல்போன் திருட்டு போனதாக கணவரிடம் தெரிவித்து இருந்தது தெரியவந்தது.

அந்த போன் தொடர்பான விவரங்களை போலீசார் சேகரித்து விசாரித்தபோது, மதுரையை சேர்ந்த முத்துபாண்டி என்பவர் அந்த போனை பயன்படுத்தி வருவதை கண்டுபிடித்தனர்.

கள்ளக்காதல்

தொடர்ந்து கங்காதேவி யாரிடம் எல்லாம் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார் என்று போன் நம்பரை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அவர் முத்துபாண்டி என்பவரிடம் தொடர்ந்து பல முறை பேசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஊட்டியில் பதுங்கி இருந்த முத்துபாண்டி (42) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

அதில் திடுக்கிடும் உண்மை வெளியே வந்தது. அதாவது கங்கா தேவிக்கும், முத்துபாண்டிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்ததும், 19 பவுன் நகையை கங்காதேவி தனது கள்ளக்காதலனான முத்து பாண்டிக்கு கொடுத்துவிட்டு, இந்த நாடகம் கணவருக்கு தெரியாமல் இருப்பதற்காக தன்னை கட்டிப்போடுமாறு கூறி கொள்ளை நாடகம் நடத்தியதும் தெரியவந்தது.

கைது

இதையடுத்து போலீசார் கள்ளக்காதலனான முத்துபாண்டியை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் இந்த பரபரப்பு தகவல்கள் அடங்கியுள்ளன. அவரிடம் இருந்து 19 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் போலீசார் முத்துபாண்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Contact Us