வீட்டுக்கு வந்த மகளின் பாய் ஃபிரண்டை கட்டி வைத்து அடித்தே கொன்ற தந்தை; உதவிய நண்பர்..

மகளை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்த அவருடைய ஆண் நண்பரை பார்த்த தந்தை, ஆத்திரத்தில் அவரை கட்டி வைத்து அடித்தே கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

17 வயது மகளுடனான உறவை முறித்துக் கொள்ளுமாறு பலமுறை எடுத்துக்கூறியும் கேட்காத இளைஞர், அவரின் வீட்டுக்கே வந்ததால் ஆத்திரத்தில் தந்தை செய்திருக்கும் வெறிச்செயல் அந்த இளைஞரின் உயிரை பறித்திருக்கிறது.

டெல்லியின் வடகிழக்கில் உள்ள கராவல் நகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அந்த 46 வயது நபரின், 17 வயது மகள், உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத்தை சேர்ந்த 20 வயது இளைஞரை காதலித்து வந்தததாக கூறப்படுகிறது. மகளின் காதல் குறித்து அறிந்த தந்தை தங்களின் உறவை கைவிடுமாறு இருவரையும் எச்சரித்திருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த புதனன்று, மாமாவை பார்ப்பதற்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு வந்திருக்கிறார் அந்த 20 வயது இளைஞர். வந்தவர் தனது காதலியை பார்ப்பதற்காக இரவில் அவருடைய வீட்டிற்கு சென்றிருக்கிறார். இளைஞர் சென்ற நேரத்தில், அவர் காதலித்து வந்த பெண்ணின் தந்தை வீட்டில் இருந்திருக்கிறார். இளைஞரை பார்த்து ஆத்திரமடைந்த தந்தை, அந்த இளைஞரை பலவந்தமாக தாக்கி தனது வீட்டிலேயே கட்டி வைத்திருக்கிறார்.

பின்னர் கத்திரிக்கோலால் குத்தி கிழித்திருக்கிறார். அதன் பின்னர் அந்த இளைஞரை சரமாரியாக அடித்து காயப்படுத்தியிருக்கிறார். தொடர் தாக்குதலால் அந்த இளைஞர் பரிதாபமான உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் தந்தை, தன்னுடைய நண்பரை தொலைபேசியில் அழைத்து விவரத்தை கூறி உதவிக்காக அழைத்துள்ளார். பின்னர் இருவரும் அருகே இருக்கும் ஜிம் பகுதியில் அந்த இளைஞரின் சடலத்தை கொண்டு சென்று போட்டுவிட்டு வந்துள்ளனர்.

காவல்துறையினரின் தீவிர விசாரணையில், மகளை சந்திக்க வந்த இளைஞரை அவரின் தந்தை கட்டி வைத்து அடித்து கொலை செய்ததும், நண்பரின் உதவியுடன் சடலத்தை மறைத்ததும் தெரியவந்துள்ளது. அப்பெண்ணின் தந்தையை கைது செய்த காவல்துறையினர், சடலத்தை மறைக்க உதவிய அவருடைய நண்பரை தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருக்கு அவருடைய காதல் குறித்து ஏதும் தெரியவில்லை. இந்த கொலை சம்பவம் டெல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us