பாகிஸ்தான் வான்வெளியை தவிர்த்த இந்திய விமானப்படை விமானம்; நடந்தது என்ன?

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில், மீண்டும் தலிபான்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தொடர்ந்து கைப்பற்றி வரும் தலிபான்கள், ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுவரை 85 சதவீத பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு சூழல் மோசமடைந்து வரும் நிலையில், காந்தகாரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. காந்தகார் அருகில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருவதால் இந்த செய்தி பரவியது. ஆனால், தூதரகம் மூடப்படவில்லை என்று இந்திய அரசு தெரிவித்தது.
தலிபான்கள்
அதேசமயம், பாதுகாப்பு காரணமாக தூதரகத்தில் பணியாற்றிய 50 தூதர்கள் மற்றும் பிற ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் நேற்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அந்த விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதை தவிர்த்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலைமையை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், தூதரக பணியாளர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்றும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
‘காந்தகார் நகருக்கு அருகே கடுமையான சண்டை நடப்பதால், இந்தியாவைச் சேர்ந்த பணியாளர்கள் தற்போதைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நிலைமை சீராகும் வரை இந்திய வீரர்கள் இங்கு இருப்பார்கள். உள்ளூர் ஊழியர்கள் மூலம் தூதரகம் தொடர்ந்து செயல்படும்’ என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறி உள்ளார்.
காந்தகார் துணை தூதரகத்தை மூடும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று காபூலில் உள்ள இந்திய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் ஹெராத் மற்றும் ஜலாலாபாத்தில் உள்ள துணை தூதரகங்கள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us