கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்; 35 பேர் கொன்று குவிப்பு!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் பல்வேறு ஆயுதக்குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த ஆயுதக் குழுக்களை சேர்ந்தவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்றுவிட்டு வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை அடிப்பது மற்றும் கால்நடைகளை திருடிச் செல்வது போன்ற நாசவேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடமேற்கு மாகாணம் ஷாம்பாராவில் மாராடூன் என்ற மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் புகுந்தனர். பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல் சுட்டுத் தள்ளினர். மேலும் அங்கிருந்த வீடுகளை தீ வைத்து எரித்தனர். அதனை தொடர்ந்து அருகிலுள்ள மேலும் 4 கிராமங்களுக்குள் புகுந்து இதே போல் கொடூர தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 5 கிராமங்களை சேர்ந்த 35 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us