தற்கொலை செய்துகொண்ட மனைவியின் உடலை கீழே இறக்கி அருகில் படுத்து உறங்கிய கணவர்!

கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலனியைச் சேர்ந்தவர் மாலதி (வயது 41). இவர் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை சேர்ந்த தனசேகரனை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஆசித் என்ற மகன் உள்ளான்.

தனசேகரன் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் போதை ஒழிப்பு மையத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். மாலதி காசா காலனியில் உள்ள தாய் தமிழரசி வீட்டில் மகன் ஆசித்துடன் வசித்து வந்தார்.

கடந்த 9-ந்தேதி தனசேகரன் மனைவி, குழந்தையை பார்க்க மாயனூர் வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக தனசேகரன் தொடர்ந்து குடிபோதையிலேயே இருந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது. தனசேகரன் போதையில் படுத்து தூங்கி விட்ட நிலையில் விரக்தி அடைந்த மாலதி வீட்டில் உள்ள மின் விசிறியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தாய் தூக்கில் தொங்குவதைக்கண்ட ஆசித் கதறி அழுதுள்ளான். மகனின் அழுகை சத்தம் கேட்டு எழுந்த தனசேகரன் துப்பட்டாவை அறுத்து மனைவியின் பிணத்தை கீழே இறக்கிப்போட்டு விட்டு மீண்டும் மதுபோதையில் அருகிலேயே தூங்கியுள்ளார். இதனால் ஆசித் அழுது கொண்டே வீட்டுக்கு வெளியே வந்துள்ளான்.

இதனை கண்ட அப்பகுதியினர் மாயனூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீசார் வந்து எழுப்பியும், தனசேகரன் போதை தெளியாததால் போலீசார் விடியும் வரை காத்திருந்து நேற்று காலை தனசேகரனிடம் விசாரணை நடத்திய பின் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் மாலதியின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Contact Us