கணவனின் கணினியை பயன்படுத்த, அதிலுள்ள தகவல்களை பெற மனைவிக்கு கல்கிஸ்ஸ நீதிமன்றத்தால் தடை

 

தனது கணவரின் கணினியை சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்துவதற்கும் அதிலுள்ள தகவல்களைப் பதிவிறக்குவதற்கும் மற்றும் அவரது உடமையில் கண்காணிப்பு சாதனத்தை பொருத்துவதற்கும் மனைவிக்கு தடை விதிக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றத்தில் கணவர் ஒருவர் தாக்கல் செய்த சிறப்பு வழக்கு ஒன்றில் இவ்வாறு உத்தரவிப்பட்டுள்ளது. அவர் வீட்டில் இல்லாதபோது தனது மனைவி தனது தனிப்பட்ட கணினியை சட்டத்துக்குப் புறம்பாகவும் தவறாகவும் அணுகியதாகவும், பல்வேறு தகவல்களை பதிவிறக்கம் செய்தும் அலைபேசி உரையாடல்களை பதிவு செய்ததாகவும் அந்த வழக்கில் வழக்காளி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த போது மனைவி தனது அறையில் ஓடியோ கண்காணிப்பு சாதனத்தை நிறுவியதாகவும் வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையிலான மணநீக்க வழக்கு கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

கணவன் கொழும்பில் உள்ள ஒரு அரச மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுவதுடன், ​​மனைவி வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு அரச மருத்துவமனையில் வைத்திய ஆலோசகராக சேவையாற்றுவதாக கணவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது அனுமதியின்றி தனது வட்ஸ்அப் கணக்கில் உள்ள மின்னணு தகவல் தொடர்புகளை அணுக தனது கணினியைப் பயன்படுத்த முயற்சித்ததாக எதிராளி மீது வழக்காளி குற்றம்சாட்டுகிறார்.

தனக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கில் தனது பிரிந்த மனைவி அப்படி நடந்து கொண்டார் என்று வழக்காளி கூறியுள்ளார்.

சட்டத்துக்குப் புறம்பாக, எந்தவொரு அனுமதியும் இல்லாமல், தகவல்களைச் சேகரிப்பதில் மனைவியின் நடத்தை மற்றும் ஒரு மின்னணு கண்காணிப்பு சாதனத்தை தனது கணினியில் பொருத்துவது ஆகியவை கணினி குற்றச் சட்டம் எண் 3 மற்றும் 4 ன் பிரிவுகளின் கீழ் குற்றங்கள் என்று வழக்காளி மேலும் குற்றம் சாட்டினார்.

வழக்காளியின் பிராதினை பரிசீலித்த பின்னர், கல்கிசை நீதிமன்ற மேலதிக மாவட்ட நீதிபதி திருமதி டி.எம். கொடித்துவக்கு வழக்காளியின் உடமையில் உள்ள தரவுகள், ஆவணங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை எதிராளி சேகரிப்பதைத் தடுக்கும் ஆணையை கடந்த 6ஆம் திகதி வழங்கினார்.

எதிராளியான வழக்காளியின் மனைவி வழக்காளியின் தரவுகள் அல்லது ஆவணங்கள் அல்லது உரைச் செய்திகளை எடுத்துக் கொள்வது, ஓடியோ, வீடியோ மற்றும் வேறு ஏதேனும் தகவல்களைப் பயன்படுத்துவதிலிருந்தும் மற்றும் அவற்றை மூன்றாம் தரப்பினருக்கு பகிர்வதுக்கும் இந்த ஆணை தடை செய்துள்ளது.

Contact Us