சடலத்துடன்.. விடிய விடிய செய்த அட்டூழியம்…

 

கரூர் மாவட்டம் மாயனூர் காசா காலனியை சேர்ந்தவர் மாலதி.. 41 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் தனசேகரன்.. பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை சேர்ந்தவர். இவர்களுக்கு 6 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.. லவ் மேரேஜ்.. இவர்களுக்கு 4 வயதில் ஆசித் என்ற மகன் இருக்கிறான். தனசேகரன் வேலூரில், தனியார் போதை ஒழிப்பு மையத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.. ஆனால், தனசேகரன் எப்பவுமே போதையில்தான் இருப்பார்… சில நேரம் வீட்டுக்கு வராமலும் போவார்.. அதனால், மாலதி, தன்னுடைய அம்மா வீட்டில்தான் மகனுடன் வசித்து வருகிறார்.

கடந்த 9-ந்தேதி தனசேகரன் மாலதியை பார்க்க மாயனூர் வந்திருக்கிறார்.. ஆனால், வந்ததில் இருந்தே தனசேகரன் போதையில்தான் இருந்துள்ளார்.. 3 நாட்களாக தொடர்ந்து போதை.. இதனால் வெறுத்துபோன மாலதி, வழக்கம்போல இதை பற்றி கணவனிடம் கேட்டு தகராறும் செய்துள்ளார்.. இந்த வாக்குவாதம் முற்றிவிட்டது.. தகராறும் இரவு முழுக்க நடந்தது.

ஒருகட்டத்தில் போதை அதிகமாகி தனசேகரன் அங்கேயே விழுந்து தூங்கிவிட்டார்.. இதனால் உச்சக்கட்ட விரக்திக்கு ஆளான மாலதி, அங்கிருந்த ஃபேனிலேயே துப்பட்டாவில் தூக்கு போட்டு கொண்டு தொங்கிவிட்டார்.. அம்மா தூக்கில் தொங்குவதை பார்த்து, குழந்தை கதறி கதறி அழுதுள்ளான்.. அந்த சத்தம் கேட்டு தனசேகரன் கண்விழித்துள்ளார்.

அப்போதுதான் மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்தார்.. ஆனால் ஒரு அதிர்ச்சியும் இல்லை.. ஒரு ஷாக்கும் இல்லை.. ஒரு சலனமும் இல்லை.. கிச்சனுக்கு போய் ஒரு கத்தி எடுத்து வந்து, அந்த துப்பட்டாவை அறுத்தார்.. மாலதியின் சடலத்தை கீழே இறக்கி போட்டார்.. பிறகு அந்த சடலம் பக்கத்திலேயே மறுபடியும் படுத்து தூங்க ஆரம்பித்துவிட்டார்.. சடலத்தை இறக்கும்போது ஆசித் அழுவதை பார்த்ததும், டேய் அழாதே என்று மட்டும் சத்தம் போட்டுள்ளார்.

ஆனால், ரொம்ப நேரமாக அழுது கொண்டே இருந்த ஆசித்அழுது கொண்டே வீட்டுக்கு வெளியே வந்திருக்கிறான்.. அவனை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் வந்து பார்த்தபோதுதான் உறைந்து போயினர்.. பிறகு மாயனூர் போலீசுக்கும் தகவல் தந்தனர்…. போலீசாரும் விரைந்து வந்தனர்.. ஆனால் தனசேகரன் ஃபுல் போதையில் இருந்தார்.. சடலம் பக்கத்திலேயேதான் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார்.

போலீசார் வந்து எழுப்பியும் தனசேகரன் எழவில்லை.. அதனால் போலீசார் விடிய விடிய தனசேகரனுக்கு போதை தெளியும்வரை காத்திருந்தனர்.. காலையில் போதை ஓரளவு தெரிந்தது.. அதற்கு பிறகுதான் வழக்குப்பதிவு செய்தனர். மாலதியின் சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு கரூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. இந்த சம்பவத்தை கேட்டு அந்த பகுதி மக்கள் அப்படியே ஆடிப்போயுள்ளனர்..!

Contact Us