குடிபோதையில் தாயைக் கொன்ற ரவுடி: தப்பிஓடி ஊர் ஊராக பிச்சையெடுத்து வாழ்க்கை- 5 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அதிர்ச்சி!

புதுச்சேரி வினோபா நகரைச் சேர்ந்தவர் வெரோன்(45). பிரபல ரவுடியான இவர் மீது 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அடிக்கடி சிறை சென்று வரும் இவரால் குடும்பத்தினருக்கு அவப்பெயர் உண்டானது. இதனால் அவரது தாய் சிரஞ்சீவி வெரோனிடம் பேசாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 30ந் தேதி குடிபோதையில் வந்த வெரோன் தாயிடம் சாப்பாடு கேட்டுள்ளார்.

அதற்கு வேலை வெட்டிக்கு போகாமல் ரவுடிசம் பார்க்கும் உனக்கு நான் சாப்பாடு போட மாட்டேன் என சிரஞ்சீவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வெரோன், தாயை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து தன்வந்தரி நகர் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு அதிரடிப்படை போலீசார் அவனை கைது செய்துள்ளனர்.

பிச்சைகாரன் போல வேடமிட்டு, தாடி, கையில் கம்புடன் சுற்றித்திரிந்த அவனை சிறப்பு அதிரடிப்படையினர் பிடித்து தன்வந்தரி நகர் போலீசில் ஒப்படைத்துள்ளனர். அங்கு அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. கொலை நடந்தவுடன் தப்பி ஓடிய வெரோன் சிதம்பரம், சீர்காழி, வடலூர், விருத்தாசலம் போன்ற ஊர்களில் உள்ள கோயில்களில் பிச்சைகாரன் வேடமிட்டு அமர்ந்து பிச்சை எடுத்து சாப்பிட்டு 5 ஆண்டுகளை ஓட்டியுள்ளார்.

கொரோனா 2ம் அலையின் காரணமாக வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டதால் சாப்பாடு கிடைக்காமல் வெரோன் புதுச்சேரி திரும்பியுள்ளார். குடிபிரியரான இவர் பிச்சை எடுத்து மதுகுடித்து விட்டு நகரில் சுற்றியுள்ளார். அப்படி சுற்றும் போது தான் போலீசாரிடம் சிக்கியுள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Contact Us