இஸ்லாமிய இளைஞரை மணக்க இருந்த இந்து பெண்: மூளை சலவையால் திருமணத்தை நிறுத்திய பெற்றோர்?!

இஸ்லாமிய இளைஞருடன் நடக்க இருந்த திருமணத்தை தனது பெற்றொருக்கு லவ் ஜிகாத் என எதிர்ப்பு தெரிவித்து ‘அழுத்தம்’ தந்து திடீரென நிறுத்திவிட்டதாக இந்து மதத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கர் பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு, இஸ்லாமிய இளைஞர் ஒருவருடன் திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டு திருமண வேலைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இவர்களுடைய திருமண அழைப்பிதழ் வாட்ஸ் அப் மூலம் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதை பார்த்த சிலர் இத்திருமணத்திற்கு எதிர்ப்ப்பு தெரிவித்து இது ‘லவ் ஜிகாத்’ என வர்ணித்தனர்.

இதனிடையே சிலரின் வற்புதலால் அப்பெண்ணின் பெற்றோர் தங்களது மகளின் திருமண சடங்குகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து தனது பெற்றோரை மிரட்டியும், மூளை சலவை செய்தும் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை சிலர் நிறுத்த காரணமாக இருந்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு 28 வயதாகும் அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்பெண் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, “இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் தனது வீட்டுக்கு வந்து இத்திருமணத்தை செய்ய வேண்டாம் என தன்னை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், பின்னர் நான் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்ததால், என்னுடைய பெற்றோரை சந்தித்து அவர்களை மிரட்டியும், மூளை சலவை செய்தும் உள்ளனர். இதனையடுத்து எனது பெற்றோர் என் திருமணத்தை திடீரென நிறுத்திவிட்டனர்.

திருமணம் செய்யும் வயது இருப்பதாலும், எனது முடிவு என்பது எனது தனிப்பட்ட உரிமை என்பதாலும் என் திருமணத்தை நிறுத்த காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண் புகாரில் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என தெரிகிறது. சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரித்த போது, அந்த இரண்டு ஆண்களும், பெண்ணின் தந்தை உடல்நிலை குறித்து விசாரிக்க வந்ததாக கூறியுள்ளனர்.

அவ்விருவரையும் பெண்ணின் திருமணம் அல்லது குடும்ப விவகாரங்களில் தலையிடக் கூடாது என காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், பெண்ணுக்கு ஆதரவாக சில பெண் உரிமை அமைப்புகள் துணை நிற்பதால் இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us