கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதால் பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊரார் முன்னிலையில் ஊர்வலமாக கூட்டிச் சென்ற கணவர் குடும்பத்தினர்!

23 வயது பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி, கணவர் குடும்பத்தினர் ஊர்வலமாக கூட்டிச் சென்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தின் தன்பூர் தாலுகாவில் உள்ளது கஜூரி எனும் பழங்குடியினர் வசித்து வரும் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவரை கடந்த ஜூலை 6ம் தேதி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக கூட்டிச் சென்றிருக்கின்றனர் அவரின் கணவரும், அவரது குடும்பத்தினரும்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் அப்பெண்ணின் கணவர், இரண்டு மைனர் சிறுவர்கள் உட்பட 14 பேரை கைது செய்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் வேறு ஒரு ஆணுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சமீபத்தில் அந்த நபரும், அப்பெண்ணும் வீட்டில் இருந்து வெளியேறிருக்கின்றனர். இதனையடுத்து அப்பெண்ணை கண்டுபிடித்து கஜூரி கிராமத்துக்கு கூட்டி வந்த அவருடைய கணவரும், குடும்பத்தினரும் அப்பெண்ணை தண்டிக்கும் விதமாக அவரை நிர்வாணப்படுத்தி ஊரார் முன்னிலையில் ஊர்வலம் நடத்தியிருக்கின்றனர்.

சம்பவம் நடைபெற்ற அன்று எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், 23 வயதான அப்பெண்ணின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்துகின்றனர் கணவரும் அவருடன் நடந்து வந்தவர்களும். பெரும்பாலும் கணவர் குடும்பத்தினரே அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தியிருக்கின்றனர்.

அருகில் இருக்கும் சில பெண்கள் மாற்றுத் துணி கொடுத்த போதிலும் அவற்றை தூக்கி எறிந்திருக்கின்றனர் உடன் வந்தவர்கள். பின்னர் குழந்தைகள், பெண்கள் உட்பட ஊரார் முன்னிலையில் ஊர்வலமாக கூட்டிச் சென்றிருக்கின்றனர். மேலும் அவரை அடித்தும், கணவரை தோளில் தூக்க வைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

கள்ள உறவில் ஈடுபடும் பெண்களை பழங்குடியின மக்கள் இது போன்று தண்டிப்பதாக கூறப்படும் நிலையில், இது குறித்து வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து அப்பெண்ணின் கணவர், இரண்டு மைனர் சிறுவர்கள் உட்பட 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Contact Us