காலுக்கு மாஸ்க் அணிவித்த உத்தரகண்ட் அமைச்சர்: வறுத்தெடுத்த ட்விட்டர்வாசிகள்!!

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் காலில் மாஸ்க் அணிந்தபடி இருந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநில அமைச்சரான சுவாமி யத்தீஸ்வர் ஆனந்த் முகத்துக்கு அணியும் முகக் கவசத்தை தனது காலில் அணிந்திருப்பது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தெரியவில்லை. எனினும், பிஸான் சிங் சுப்பால், சுபோத் யூனியல் ஆகிய அமைச்சர்களும் இந்த புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

உடன் இருந்த அமைச்சர்கள் இருவரும் முகக்கவசம் அணியாத நிலையில், காலில் முகக்கவசத்தை மாட்டியிருந்த அமைச்சர் யத்தீஸ்வர் ஆனந்த்தை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கொரோனா மூன்றாவது அலை மற்றும் டெல்டா வகையை எதிர்கொள்ள எப்படி முகக்கவசம் அணிவது என யத்தீஸ்வர் ஆனந்த் வெளிப்படுத்தியுள்ளதாக ட்விட்டர் பயனாளி ஒருவர் கூறியுள்ளார். முகக்கவசத்தை தொங்கவிட மிகவும் தூய்மையான பகுதியை யத்தீஸ்வர் ஆனந்த் கண்டுபிடித்துள்ளார் என மற்றொரு நபர் விமர்சித்துள்ளர்.

முகக்கவசத்தை எங்கு அணியவேண்டும் என அமைச்சருக்கு யாராவது எடுத்துக்கூறுங்கள் என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார். முகத்துக்கு பதிலாக காலில் மாஸ்க் அணிந்துள்ளதால்தான் இந்தியாவில் கொரோனா இறப்புவிகிதம் அதிகமாக உள்ளதாக ஒருவர் விமர்சித்துள்ளார்.

பொதுமக்களின் விமர்சனம் ஒருபக்கம் உள்ளநிலையில், காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளரான கரிமா தசவுனி, கொரோனா காரணமாக லட்சக்கணமாக மக்கள் இந்தியாவில் உயிரிழந்துள்ள நிலையில், காலில் முகக்கவசம் அணிந்தபடி பொதுமக்களுக்கு எந்த வகையான கருத்தை சுவாமி யத்தீஸ்வர் ஆனந்த் கூற வருகிறார் என கேள்வி எழுப்பியுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

Contact Us