2 வயது சிறுமிக்காக ரூ.6 கோடி இறக்குமதி வரி ரத்து; அரசின் அதிரடி முடிவு!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்திநகரை சேர்ந்த சதீஷ்குமார்- பிரியதர்ஷினி தம்பதியின் மகள் மித்ரா (வயது 2). இந்த சிறுமி கடந்த ஒரு மாதமாக அரியவகை மரபணு நோய் என்று அழைக்கப்படும் முதுகு தண்டுவட நார்சிதைவு நோய்க்கு உள்ளாகி சிரமத்தை சந்தித்து வருகிறாள். இதனால் அந்த சிறுமியால் நடக்க கூட முடியவில்லை. மேலும் உரிய மருத்துவம் அளிக்காவிட்டால், அவளது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

மித்ராவுக்கு சிகிச்சை அளிக்க வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்ய இறக்குமதி வரியுடன் ரூ.22 கோடி தேவைப்படுகிறது. இதற்காக குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் பொதுமக்களிடம் நிதி சேகரித்து வருகின்றனர்.

சிறுமி மித்ராவின் சிகிச்சைக்கு தேவையான ரூ.16 கோடி தன்னார்வலர்களிடம் இருந்து கிடைத்து உள்ளது. ஆனாலும் அந்த மருந்தை இறக்குமதி செய்ய ரூ.6 கோடி தேவைப்பட்டது. இதையடுத்து அந்த மருந்துக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யுமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், வைகோ உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த நிலையில் அந்த மருந்துக்கான இறக்குமதி ஜி.எஸ்.டி. வரியை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நீக்கி அறிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த விதமான கூடுதல் வரியும் இல்லாமல் மருந்தை இந்தியா கொண்டு வரும் வகையில் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டு உள்ளார்.

Contact Us