இப்படியும் சில திருடர்கள்..; தமிழர் பகுதியில் நடந்த ருசிகர சம்பவம்!

திருச்சியில் பெண்ணிடம் ஹேண்ட்பேக்கை பறித்து சென்ற திருடன் போனில் கெஞ்சியதால் ஏடிஎம் கார்டுகளை திருப்பி கொடுத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் இளஞ்சியம். குஜராத்தில் வசித்து வரும் இவரது மகள் சமீபத்தில் திருச்சி வந்துள்ளார். எடமலைப்பட்டி புதூர் பகுதியில் வசித்து வரும் தனது தோழியை பார்ப்பதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து தாய் இளஞ்சியத்துடன் அவரது மகள் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கிராப்பட்டி ரயில்வே மேம்பாலத்தில் இரவு 7 மணியளவில் சென்றுக்கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் இளஞ்சியம் கையில் வைத்திருந்த ஹேண்ட்பேக்கை பறித்துச்சென்றுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் அந்த நபரை விரட்டிச்சென்றுள்ளனர். மின்னல் வேகத்தில் சென்ற மர்மநபரை அவர்களால் பின் தொடரமுடியவில்லை. ஹேண்ட்பேக்கில் ரூ.15000 ரொக்கம், ஏடிஎம் கார்டுகள், மற்றும் இரண்டு செல்போன்கள் இருந்துள்ளது. இதனையடுத்து எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இளஞ்சியம் மற்றும் அவரது பெண்ணிடம் தொலைந்துப்போன பொருள்களின் விவரங்களை வாங்கிக்கொண்டு காலையில் ஸ்டேஷன் வந்து புகார் அளிக்கும்படி தெரிவித்துள்ளனர். தாய் மகள் இருவரும் வீடு திரும்பியுள்ளனர்.

மனம் கேட்காத இளஞ்சியத்தின் மகள் தனது செல்போன் எண்ணுக்கு தொடர்புக்கொண்டுள்ளார். திருடன் பணத்தை எடுத்துக்கொண்டு ஹேண்ட்பேக்கை சாலையில் வீசியிருந்தால் யாராவது எடுத்து வைத்திருப்பார்கள் போன் ஏடிஎம் எதாவது கிடைக்க வாய்ப்புள்ளது என்ற எண்ணத்தில் போன் செய்துள்ளார். திருடனே அந்த போன் அழைப்பை எடுத்து பேசியுள்ளார். இளஞ்சியம் மற்றும் அவரது மகள் இருவரும் தங்களது நிலையைக் கூறி அந்தநபரிடம் மிகவும் கெஞ்சியுள்ளனர். போன், ஏடிஎம் கார்டை திருப்பி தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுள்ளார். இரக்கப்பட்ட திருடன் ஹேண்ட் பேக்கை திருப்பி தர ஒத்துக்கொண்டுள்ளான்.

இதனையடுத்து இளஞ்சியம் தன் தம்பியிடம் விவரத்தை கூற அவர் அந்த நபரிடம் போனில் பேசினார். சென்னை – திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள கார் ஷோரூம் அருகே வரும்படி அந்த திருடன் கூறியுள்ளான். இரவு 9 மணியளவில் இளஞ்சியத்தின் தம்பி அங்கு சென்றுள்ளார். பைக்கில் சில அடிதூரத்திற்கு முன்பு நின்றிருந்த திருடன் அந்த ஹேண்ட்பேக்கை தூக்கிவீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளான். ஹேண்ட்பேக்கில் இருந்த ரொக்கம் 15000 திருடப்பட்டிருந்தது. 2 செல்போன்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகள் அதனுள் இருந்துள்ளது.

Contact Us