அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்ட சிகோர்ஸ்கி MH-60 Romeo வகை ஹெலிகாப்டரின் சிறப்பு என்ன?

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் இந்திய வருகையின் போது 17,500 கோடி ரூபாய் மதிப்பிலான சிகோர்ஸ்கி MH-60 Romeo வகையைச் சேர்ந்த 24 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்களை இயக்க, இந்திய கடற்படையைச் சேர்ந்த 15 அதிகாரிகளுக்கு அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சான்டியாகோவின் நார்த் ஐலாந்து தீவில் 2 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங் மற்றும் கடற்படை அதிகாரி ரண்வீத் சிங் ஆகியோர் ஹெலிகாப்டர்களை பெற்று கொண்டனர்.

சிகோர்ஸ்கி MH-60 Romeo வகை ஹெலிகாப்டர்களில் எதிரிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்து வேட்டையாட சென்சார்கள், ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி குண்டு உள்ளிட்ட மேம்பட்ட போர் அமைப்புகள் உள்ளன.

எத்தகைய ஆழத்தில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் கண்டறியக் கூடிய ரேடார்கள் மற்றும் சென்சார்களை கொண்டிருப்பது கூடுதல் சிறப்பு.

ஆயுதங்களையும் நீர்மூழ்கி குண்டுகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கவல்ல Hellfire என்றழைக்கப்படும் ஏவணைகளும் MH-60 Romeo ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட்டுள்ளன. நொடிக்கு 8.38 மீட்டர் உயரம் பறக்க வல்லது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 267 கிலோ மீட்டர். தொடர்ந்து 834 கிலோ மீட்டர் வரை பறக்கும் வகையிலும் அதிகபட்சமாக 3,438 மீட்டர் உயரம் வரை செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6,895 கிலோ எடை கொண்ட இந்த ஹெலிகாப்டர், 10,659 கிலோ எடை வரை சுமந்து செல்லும்.

அடுத்த 5 ஆண்டு காலத்தில் மீதமுள்ள 22 ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு வந்து சேரும். இது எதிரி நாட்டு நீர்முழ்கி கப்பல்களை அழிக்கவல்லது என்பதால் இந்தியாவுக்கு இருந்த வெற்றிடம் இதன் மூலம் நிரப்படும்.

பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகியவை நீர்மூழ்கி கப்பல்களில் முதலீட்டை அதிகரித்து வருகின்றன. சீனாவிடமிருந்து 8 புதிய யுவான் வகை ஹெலிகாப்டர்களை வாங்க பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிலையில் இந்திய கடற்படைக்கு சிகோர்ஸ்கி MH-60 Romeo வகை ஹெலிகாப்டர்களின் வருகை பெரும் பலமாக அமையும் என கருதப்படுகிறது.

Contact Us