கருணாநிதி என்னை பாராட்டினார், ஜெயலலிதாவுடன்.. சும்மா அடித்துவிட்ட சசிகலா?

சசிகலாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- உங்களின் ஆரம்ப கட்ட வாழ்க்கை பற்றி நீங்கள் அதிகம் பேசியதில்லை. அதை பற்றி சொல்லுங்களேன்?

பதில்:- எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். அப்பாவுடன் பிறந்தவர்கள் 11 பேர். குடும்பத்தில் மொத்தம் 46 பேரக்குழந்தைகள். கூட்டுக்குடும்பமாக இருந்தோம்.

கேள்வி:- வாழ்க்கையில் என்னவாக ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள்?

பதில்:- மருத்துவராக விரும்பினேன்.

கேள்வி:- ஏன் அது சாத்தியமாகவில்லை?

பதில்:- எங்க குடும்பத்தில் பெண்களுக்கு இளம்வயதிலேயே திருமணம் செய்து விடுவார்கள். அந்த வகையில் எனக்கும் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அதனால் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

கேள்வி:- நடராஜனுடன் திருமணம் நடைபெற்றது பற்றி சொல்லுங்கள்…

பதில்:- திருமணம் நிச்சயமாகும்போது அவர் தி.மு.க.வில் இருந்தார் என்பது எனக்கு தாமதமாகத்தான் தெரியவந்தது. 1973-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி தஞ்சையில் உள்ள கரந்தை தமிழ் சங்கத்தில் எங்கள் திருமணம் நடந்தது. மேடைக்கு வந்த கருணாநிதி, மணப்பெண் நிமிர்ந்த நிலையில் மிடுக்காக அமர்ந்திருக்கிறார் என்று சிரித்துகொண்டே சொன்னது இன்னமும் நினைவில் உள்ளது. பிறகு மேடையில் பேசும்போது, ‘மிகவும் துணிச்சலான பெண்ணாக தோன்றுகிறார், பெண்கள் இப்படித்தான் இருக்கவேண்டும்’ என்றும் கூறினார்.

கேள்வி:- ஜெயலலிதாவை முதலில் சந்தித்தது எப்போது?

பதில்:- 1981-ம் ஆண்டு இறுதியில் முதன் முறையாக சந்தித்தேன். அப்போது நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டில் முழுமையான வீடியோ படப்பிடிப்பு பணிகளை செய்தோம். எங்களிடம் இருந்த திறமையான ஒளிப்பதிவாளர்களின் பணி அவரை ஈர்த்தது. அப்படித்தான் எங்கள் வீடியோ காட்சிகளை வெகுவாக பாராட்டியிருக்கிறார். எங்களை பற்றி கட்சியினரிடம் விசாரித்திருக்கிறார். அதன்பின்னர், அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தின் மேலாளர் துரை எங்கள் வீட்டுக்கு வந்து, இனி ஜெயலலிதாவின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து வீடியோ படம் பிடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது சர்ச்சையானது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ கேசட்டில் பின்னணி இசை சேர்க்க என் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார். அப்போது, இந்த கேசட்டை பெரிய தொகை கொடுத்து வாங்கி கொள்ள தி.மு.க.வினர் என்னிடம் தொலைபேசி மூலம் பேசினர். உடனே நான் துரை மூலம் இந்த கேசட்டை ஜெயலலிதாவிடம் கொடுத்துவிட்டேன். இதைத்தான் தேடிக்கொண்டிருப்பதாகவும், தலைவரும் (எம்.ஜி.ஆர்.) அதை கேட்டதாகவும் துரையிடம் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு ஜெயலலிதா என்னை சந்திக்க விரும்பினார். ஒரு நாள் மாலை 3 மணிக்கு எனக்கு கார் அனுப்பி என்னை வீட்டிற்கு அழைத்தார். அன்றுதான் அவரை சந்தித்தேன். அப்போது படுக்கை அறையில் இருந்த ஜெயலலிதா, கட்சிகாரர்கள் அனுப்பியிருந்த கடிதங்களை படித்துக்கொண்டிருந்தார். நானும் அங்குதான் அவரை சந்தித்தேன். ஏராளமான கடிதங்கள் வந்திருந்த நிலையில், அனைத்தையும் ஒன்று விடாமல், முழுமையாக படித்து கொண்டிருந்த அவரின் கடமை உணர்வு, கடின உழைப்பு என்னை கவர்ந்தது. அவருக்கு இந்தப்பணியில் உதவ விரும்புவதாக கூறினேன்.

கேள்வி:- ஜெயலலிதாவுடன் ஆரம்பக்கால நட்பில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் பற்றி கூறுங்களேன்?

பதில்:- அவருக்கு வெளியே செல்லவேண்டும் என்று ஆசை. ஆனால் சினிமா பிரபலம் என்பதால் எங்கு சென்றாலும் கூட்டம் கூடி விடும் என்பதால் எங்கும் செல்ல முடியவில்லை. வெளியில் செல்லவேண்டும் என்ற அவரது ஆசையை நிறைவேற்றினேன். காலை 7 அல்லது 8 மணிக்கு திருவான்மியூர் தாண்டி காரில் செல்வோம். எங்களுடன் உதவிக்கு ஒரு சிறுமி மட்டுமே வருவாள். காரை தூரமாய் நிறுத்திவிட்டு இருவரும் முகத்தை பூப்போட்ட லுங்கியால் முக்காடு போட்டப்படி 2 கிலோ மீட்டர் தூரம் காலார நடப்போம். எங்களை யாரும் அடையாளம் கண்டுகொண்டதே இல்லை.

கேள்வி:- ஆரம்பம் முதலே அவரை அக்கா என்று தான் அழைத்தீர்களா?

பதில்:- ஆம், சந்தித்த முதல் நாளில் இருந்து அக்கா என்று தான் அழைத்தேன். என்னை அவர் சசி என்று அழைப்பார்.

கேள்வி:- உங்களின் நட்புக்கு எம்.ஜி. ஆரின் அங்கீகாரம் இருந்ததா? அவரை முதன் முதலில் எங்கு சந்தித்தீர்கள்?

பதில்:- அங்கீகாரம் இருந்தது. என்னைப்பற்றி அக்கா அவரிடம் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு, எம்.ஜி.ஆர். என்னை மாம்பலம் அலுவலகத்திற்கு வரச் சொல்லி சந்தித்தார். அம்முவின் நல்ல நண்பராக இருக்கிறீர்கள், அவரை நன்கு பார்த்துக்கொள்ளும்படி கூறினார். எனது குடும்பத்தை பற்றி விசாரித்தார்.

கேள்வி:- ஜெயலலிதாவை பிடிக்காத அப்போதைய அமைச்சர்கள் மூலம் உங்களுக்கு பிரச்சினைகள் வந்ததா?

பதில்:- பல பிரச்சினைகள் வந்தன. என் கணவரை புதுக்கோட்டைக்கு பணி இட மாறுதல் செய்தனர். அதைக்கூட நான் அக்காவிடம் தெரிவிக்கவில்லை.

கேள்வி:- நடராஜன்தான், ஜெயலலிதாவுக்கு அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் என்று சொல்ல முடியுமா?

பதில்:- நிச்சயமாக. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

கேள்வி:- உங்களை போயஸ் தோட்ட வாசியாக மாற்றிய தினம், எம்.ஜி.ஆர். மறைந்ததற்கு அடுத்த தினமான டிசம்பர் 25, 1987 அன்று என்ன நடந்தது ?

பதில்:- எம்.ஜி.ஆர். மறைந்த தகவலை அக்காவிடம் யாரும் தெரிவிக்கவில்லை. நான் அக்காவுக்கு போன் செய்தேன். செய்தியை கேட்டதும் அதிர்ச்சியடைந்து மவுனமானார். நான் உடனடியாக அங்கிருந்து ஒரு காரை வரவழைத்து நானும், தினகரனும் போயஸ்தோட்டம் சென்று அக்காவை அழைத்துக்கொண்டு ராமாவரம் தோட்டத்துக்கு சென்றோம். எங்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி கேட்டை பூட்டினார்கள். நான் காரை பின்னால் எடுத்து வேகமாக ஓட்டிச்சென்று கேட்டை உடைத்து உள்ளே செல்லுமாறு டிரைவரிடம் தெரிவித்தேன். டிரைவர் காரை பின்னோக்கி இயக்கிய வேகத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் கேட்டை திறந்துவிட்டார்கள். நானும் அக்காவும் உள்ளே சென்றோம்.

அங்கே முன்னாள் அமைச்சர் ராஜாராம், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் இருந்தார்கள். எங்களை பார்த்தவுடன் அவர்களை உள்ளே விடுங்கள் என ரஜினிகாந்த் சொன்னார். நான் அவரை திரும்பிப்பார்த்தேன். அப்போதுதான் முதல்முறையாக நடிகர் ரஜினிகாந்தை பார்த்தேன். உள்ளே சென்றோம் அங்கே தலைவரின் உடல் இல்லை. சில பெண்கள் மட்டும் அழுதுகொண்டிருந்தார்கள். எங்களை ஒருவர் அந்த அறையில் வைத்து பூட்ட முற்பட்டார். கதவுகளின் நடுவில் தினகரன் நுழைந்து எங்களை வெளியே அழைத்து வந்தார். வெளியே நின்றிருந்த வெள்ளை நிற ‘ஸ்டேண்டட்’ வேனில் தலைவரின் தொப்பி என் கண்ணில் பட்டது. நான் அக்காவிடம் தலைவர் உடல் வேனில் இருப்பது பற்றி சொன்னேன். அதற்குள் அந்த வேன் புறப்பட்டுவிட்டது. தலைவரின் உடலை இறுதி மரியாதைக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச்சென்றனர். நாங்கள் அதை பின்தொடர்ந்து சென்றோம். அப்போது அங்கு எங்களை உள்ளே அழைத்துச்செல்ல என் கணவர் ஏற்பாடுகள் செய்திருந்தார். உள்ளே சென்று தலைவரின் தலைமாட்டில் அக்கா நின்றார். நான் பக்கத்தில் நின்றேன். எங்களுடன் தினகரனும் இருந்தார். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Contact Us