இலங்கை அருகே இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல்? மர்மம் என்ன?

ஸ்ரீலங்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நெருக்கம் மேலும் வலுப்பெற்று வருகின்றமை இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இலங்கைக்கு அருகே தமது நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை இந்தியா நிராகரித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகையில் இன்று இந்த நீர்மூழ்கிக் கப்பல் பற்றிய செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அந்த செய்தி குறித்து பதில் வழங்கியிருக்கின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சிந்துஷாஸ்ட்ரா என்கிற அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு மிக அருகிலுள்ள தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள ஐ.என்.எஸ் கட்டபொம்மன் கடற்படைக் கப்பல் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்தப் பத்திரிகையில் செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் உள்ள துறைமுகங்களை சீனா குத்தகைக்கு எடுப்பதாகவும் இந்த நிலைமையில், நாட்டின் அனைத்து எல்லைப் பிரதேசங்களிலும் அதிநவீன போர் விமானங்கள், பீரங்கிகள், ஹெலிகொப்டர்கள், விமானம் தாங்கி கப்பல்கள் என்பவற்றை இந்தியா தயார்நிலையில் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மூத்த ஊடகவியலாளர் ஒருவரின் கீழ் இயங்கும் அந்தப்பத்திரிகையில் இலங்கைக்கு அருகே அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை இந்தியா நிலைநிறுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. எனினும் இந்த செய்தி குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று பகல் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வாறு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இலங்கைக்கு அருகில் இந்தியா நிலைநிறுத்தியிருப்பதாக வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது என்று உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவின் நெருக்கம் இலங்கை மீது அதிகரித்திருப்பதால், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகிவிடும் என்ற காரணத்தினால் இந்தியாவுக்கு அருகிலுள்ள இலங்கையின் வான்பரப்பை கண்காணிப்பதற்காக அதிநவீன ஆளில்லா கண்காணிப்பு விமானங்களை ஈடுபடுத்த இந்திய அரசாங்கம் விடுத்த கோரிக்கையை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிராகரித்ததாக கடந்த மாதம் செய்திகள் வெளிவந்திருந்தன. எனினும் அதனையும் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Contact Us