ரெடியாகிறது முக்கிய புள்ளிகளின் “வாக்குமூலம்”.. பழைய வழக்கை தூசி தட்டிய ஸ்டாலின்..

 

மிக முக்கியமாக கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விரைவில் முக்கிய திருப்பம் ஏற்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. முக்கியமான புள்ளிகள் சிலர் இந்த வழக்கில் வாக்கு மூலம் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. நீலகிரி மாவட்டத்தில் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா இருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் இங்கு பெரிய அளவில் பாதுகாப்பு பணிகள் செய்யப்படுவது இல்லை. இந்த நிலையில் கடந்த 2017ல் இங்கு பெரிய கொள்ளை சம்பவம் ஒன்று நடைபெற்றது.

017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதோடு இந்த எஸ்டேட்டில் அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து சயான், மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது இந்த வழக்கில் புகார் வைக்கப்பட்டது. சயான், மனோஜ், கனகராஜ் ஆகிய மூன்று பேரும் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்டனர். இவர்களுக்கு பின் பெரிய குழு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த கொள்ளைக்கு பின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்து ஒன்றில் பலியானதும் பல சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு சினிமாவில் காட்டப்படுவது போல பல திருப்பங்களுடனும், புதிர்களுடனும் நகர்ந்து சென்றது. இந்த வழக்கில் ஒருவர் மரணமடைய மீதமுள்ள 10 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சயானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. சயானை தொடர்ந்து மனோஜிற்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வருடமாக நீதிமன்ற காவலில் இருந்த இரண்டு பேருமே தற்போது பெயிலில் வெளியே வந்து இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றஞ்சாட்டி இருந்தனர்.

கொடநாடு சம்பவத்திற்கும் இபிஎஸ்ஸிற்கும் தொடர்பு இருப்பதாக இவர்கள் டெல்லியில் பேட்டி அளித்து இருந்தனர். அதன்பின் போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர்கள் தற்போது பெயிலில் வெளியே வந்து இருக்கிறார்கள். இந்த வழக்கில் ஏற்கனவே 300 பக்கத்திற்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்த போதே இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் அனைத்து தரப்பையும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக தெரிகிறது. தொடக்கத்தில் இருந்து 10 பேரும் விசாரிக்கப்பட உள்ளனர். இதனால் கொடநாடு வழக்கில் விரைவில் முக்கிய திருப்பங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக நமக்கு கிடைத்த தகவலின்படி, கொடநாடு வழக்கில் முக்கியமான புள்ளிகள் சிலர் விரைவில் போலீஸிடம் வாக்குமூலம் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமான சில தகவல்களை இவர்கள் வாக்குமூலமாக கொடுப்பார்கள். இந்த வாக்குமூலத்திற்கு பின் மொத்தமாக வழக்கு திசை மாறலாம் என்று கூறப்படுகிறது.

சயான், மனோஜ் வெளியே வந்துள்ள நிலையில் அவர்களையும் விசாரணைக்கு அழைக்கும் முடிவில் போலீஸ் இருப்பதாக தெரிகிறது. அதேபோல் கொடநாட்டில் ஆதாரங்களை மீண்டும் திரட்டும் பணியில் போலீசார் உள்ளனர். முக்கிய சில வாக்குமூலங்கள் வரும் நாட்களில் வெளியாகும், அந்த வாக்குமூலங்களுக்கு பின் மொத்தமாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று தகவல்கள் வருகின்றன.

Contact Us