பள்ளிக்கூடத்தில் 13 வயது சிறுவன் கோடாரியால் வெட்டி கொலை – சக மாணவன் வெறிச்செயல்!

உலகிலேயே கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் குறைவாக நடக்கும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. இந்த நிலையில் அங்கு உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவன் ஒருவன் சக மாணவனால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டை அதிர வைத்துள்ளது.

சிங்கப்பூரின் மதிப்புமிக்க பள்ளிக்கூடங்களில் ஒன்றாக அறியப்படுவது ரிவர் வேலி உயர்நிலைப்பள்ளி. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்தில் உள்ள கழிவறைக்கு சென்றபோது அங்கு சக மாணவன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போயினர். இதுபற்றி அவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் மாணவனின் உடலுக்கு அருகே கிடந்த ரத்தம் படிந்த கோடாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் கொலை செய்யப்பட்ட அந்த மாணவன் 13 வயது சிறுவன் என்பதும், அதே பள்ளிக்கூடத்தில் படிக்கும் 16 வயது சிறுவன் அவனை கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மாணவனின் இந்த வெறி செயலுக்கான காரணம் குறித்து போலீசார் அவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை சம்பவம், பள்ளி பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் மன ஆரோக்கியம் குறித்து நாட்டு மக்களிடையே இணையதளத்தில் தீவிர விவாதங்களை தூண்டியுள்ளது.

Contact Us