விஜய் மல்லையா இந்தியா கொண்டுவரப்படுவது உறுதி; வெளியான தகவல்!

இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதனை திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச்சென்றார்.

அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதையடுத்து அவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை இங்கிலாந்து அரசு கைது செய்தது. மேலும் அவரை நாடு கடத்த லண்டன் கோர்ட்டும் உத்தரவிட்டது. இதையடுத்து இங்கிலாந்து அரசும் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையே ஜாமீனில் உள்ள விஜய் மல்லையா, தன்னை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதில் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இங்கிலாந்தில் புகலிடம் கேட்டு விஜய் மல்லையா விண்ணப்பம் செய்துள்ளதால் அதன் மீது முடிவு எடுக்கப்பட்டு பிறகு நாடு கடத்துவது குறித்து உறுதி செய்யப்படும்.

இந்த நிலையில் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் இங்கிலாந்திடம் இருந்து சாதகமான பதில் வந்துள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்‌ஷன்வர்தன் ஷ்ரிங்கபா அறிவித்துள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்‌ஷன்வர்தன் ஷ்ரிங்கபா

அவர் இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். அப்போது விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

விஜய் மல்லையாவை நாடு கடத்துவது பற்றி இங்கிலாந்து தரப்பு செயல்படுவதை புரிந்து கொள்ள எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

நாங்கள் சிறப்பாக வழக்குகளை தொடங்கி உள்ளோம். மேலும் அவர்களிடம் (இங்கிலாந்து) இருந்து விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக சிறந்த உத்தரவாதம் வந்துள்ளது. அதனால் அவர் இந்தியா கொண்டு வரப்படுவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Contact Us