சிக்கிய நண்டை மீண்டும் கடலில் விட்டால் பரிசு: விநோத அறிவிப்புக்கு காரணம் என்ன?

வலையில் அகப்படும் சினை நண்டுகளை, கடலிலேயே உயிருடன் விட்டு வந்தால், நண்டு ஒன்றுக்கு 200 ரூபாய்- வழங்கப்படும் என  தஞ்சை மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமம் ஒன்று அறிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள  கொள்ளுக்காடு கிராமம் மீனவர்கள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள மீனவர்கள், நண்டு வலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடந்த சில வருடங்களாக விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன் பிடித்து வருவது அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக,கடல் வளம் குறைந்து மீனவர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் நண்டு வளத்தை பெருக்கும் வகையில்  அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வலையில் அகப்படும் சினை நண்டை உயிருடன் கடலிலே விட்டு விட்டு, அதை வீடியோவாக எடுத்து அனுப்புபவர்களுக்கு,ஒரு நண்டுக்கு 200 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தப் பகுதியில் உள்ள மீனவ மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கி, கடல் வளத்தை பெருக்கவும், கடல் வளத்தை காக்கவும் இந்த கிராமத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்த கிராம மக்களின் புது முயற்சி கடல் ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Contact Us