வீட்டிலேயே குக்கரில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த யூடியூபர்

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் வீட்டிலேயே குக்கரில் சாராயம் காய்ச்சி , ஒரு லிட்டர் வாட்டர் கேன் மூலம்  விற்பனை செய்த “யூடியூபர்” சுந்தர்ராஜ்  என்பவரை  காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 6 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 75 லிட்டர்  சாராய ஊறல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள வதம்பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். 34 வயதான இவர் வீட்டிலேயே கைத்தறி அமைத்து நெசவு தொழில் செய்து வருகிறார். மேலும் தனியாக யூ டியூப் சேனலும் சுந்தர்ராஜ் நடத்தி வருகின்றார். இவர் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் திருப்பூர் மாவட்டம்  காமநாயக்கன் பாளையம் பகுதி வழியாக சென்று கொண்டு இருந்த போது போலீசார் வாகன சோதனையில் சிக்கினார்.

அப்போது அவரது இரு சக்கர வாகனத்தில் இருந்த  6 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்துருந்தது தெரியவந்தது. வாட்டர் கேன்களில் ஊற்றி எடுத்து செல்லப்பட்ட சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, கோவை மாவட்டம் வதம்பசேரியில் உள்ள தனது வீட்டில் சாராயம் காய்ச்சியதை ஒப்புக் கொண்டார்.

உடனடியாக காமநாயக்கன்பாளையம் போலீசார், சுல்தான்பேட்டை காவல்துறைக்கு  தகவல் தெரிவித்தனர். சுல்தான்பேட்டை காவல்துறையினர் வதம்பசேரியில் சுந்தர்ராஜ் வீட்டிற்கு சென்று சோதனை நடத்திய போது, அவரது வீட்டில் பதுக்கி  வைக்கப்பட்டிருந்த 75 லிட்டர் சாராய ஊறல் மற்றும் சாராயம் காய்ச்ச தேவையான மூலப் பொருள்களான சர்கரை, பேரிட்சம்பழம், படிகாரக் கல், அடுப்பு உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

சுந்தர்ராஜ் வீட்டிலேயே குக்கர் மூலம் சாராயம் காய்ச்சி வந்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சுந்தர்ராஜ் தனியாக FM RJ sundhar channel என்ற பெயரில் யூ டியூப் சேனல் வைத்திருப்பதும், சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பண்பலைகளில் ரேடியோ ஜாக்கியாக சில தினங்கள் பணிபுரிந்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வாட்டர் கேனில் சாராயத்தை ஊற்றி எடுத்து செல்லும் போது யாருக்கும் சந்தேகம் வராது என்பதால் அதில் ஊற்றி எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்திருப்பதும் போலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசாரும், சுல்தான்பேட்டை போலீசாரும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us