வளர்ப்பு நாயை பல கி.மீ. காரின் பின்னால் கட்டி இழுத்து சென்ற கொடூரம்; நடந்தது என்ன?

கேரள மாநிலம் திருச்சூர் அருகே கடந்த ஆண்டு ஒருவர் தன்னுடைய வீட்டில் வளர்த்து வந்த நாயை காரில் கட்டி இழுத்து சென்றார். இது தொடர்பான புகாரின் பேரில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையான நிலையில் மீண்டும் இதேபோல் ஒரு சம்பவம் நடந்து உள்ளது.

கேரளாவின் கோட்டயம் அருகே அயர்க்குன்னம் பகுதியில் நேற்று சாலையில் ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரின் பின்னால் ஒரு நாள் கட்டி இழுத்து செல்லப்பட்டது. இதனை அந்த பகுதியினர் பார்த்தனர். அவர்கள் காரை வாகனங்களில் துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் கார் சென்று விட்டது.

இதன்பின்னர் இதுபற்றி அயர்க்குன்னம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது கார் ஒன்றில் நாயை கட்டி இழுத்து சென்றது உறுதியானது.
இதனையடுத்து நடந்த விசாரணையில் காரை ஓட்டி சென்றது கோட்டயம் அருகே லாக்காட்டூர் பகுதியை சேர்ந்த ஜெகுதாமஸ் (22) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் போலீசிடம் கூறும்போது, தன்னுடைய வீட்டினர் இரவில் நாயை காரின் பின்புறம் கட்டி இருந்தனர்.

இது தெரியாமல் நான் காரை எடுத்து சென்றதாக கூறினார். இதுபற்றி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் அந்த நாய் உயிரிழந்து விட்டது. இந்த வழக்கில் அந்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை கிடைக்க கூடும் என்று கூறப்படுகிறது.

Contact Us