யாழில் அலுவலகத்துக்குள் வைத்து பெண் அலுவலர் மீது ஆண் அலுவலர் கொடூர கத்திக் குத்து!!

 

யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள வடக்கு மாகாண கட்டிடங்கள் திணைக்களகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், அதே அலுவலகத்தில் பணியாற்றும் இளம் பெண் அலுவலர் கத்தியால் தலையிலும் முகத்திலும் குத்திவிட்டு, குளியல் அறைக்குள் நுழைந்து தனக்கும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார். இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று (28) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றது. ஒரு தலைக் காதலினாலேயே இந்த விபரீதம் நிகழ்ந்தது. அலுவலகத்தில் வைத்து பெண்ணை கத்தியால் குத்தி விட்டு, மலசலகூடத்திற்குள் நுழைந்து கதவை தாளிட்டுக்கொண்டு அந்த உத்தியோகத்தர் இருந்து விட்டார். அலுவலகத்தில் இருந்தவர்கள், காயப்பட்ட பெண்ணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்தனர். அவர்அதிதீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த பகுதியால் சிவில் உடையில் வந்த பொலிஸார் சம்பவத்தை அறிந்து, அங்கு சென்றனர். மலசலகூடத்தில் மறைந்திருந்தவரை வெளியில் வருமாறு அழைத்துள்ளனர். எனினும், உள்ளேயிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து பொலிசார் கைத்தொலைபேசி கமரா மூலம் உள்ளே நடப்பதை படம் பிடித்த போது, உள்ளே அந்த நபர் இரத்த வெள்ளத்தில் விழுந்திருந்தது தெரிய வந்தது.

உடனே கதவை உடைத்து அவரை மீட்டு அலுவலக வாகனத்தில் அவரை அழைத்துச் சென்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர். கத்தியால் தனது வயிற்றையும் குத்திக் கிழித்துள்ளார். இரண்டு சம்பவங்களிற்கும் வேறு வேறு கத்திகளையே பாவித்துள்ளார். பின்னர் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் ஒரு தலைக்காதலால் இந்த விபரீதம் நடந்தது தெரிய வந்தது.

மானிப்பாயை சேர்ந்த அந்தப் பெண் அலுவலர் விவாகரத்தானவர். அந்த அலுவலகத்தில் பணியாற்றும் பருத்தித்துறை, புலோலியை சேர்ந்த உத்தியோகத்தர் ஒரு தலையாக காதலித்துள்ளார். பெண் உத்தியோகத்தருக்கு இதனால் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால், இரண்டு வாரங்களின் முன்னர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் அந்தப் பெண் முறைப்பாடொன்றும் பதிவு செய்துள்ளார். மானிப்பாய் பொலிசார் ஒரு தலை காதலனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அலுவலகத்திற்குள் வைத்து உத்தியோகத்தர் மீது கொலைவெறி தாக்குதல் இடம்பெற்றது. சந்தேகநபரான ஆணின் மேசை லாச்சிக்குள் இன்னும் இரண்டு கத்திகளும் ஒரு கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவு பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us