குடும்பத்தினருடன் கதறி அழுத பசவராஜ் பொம்மை.. முதல்வரின் மறுபக்கம்.. என்ன கொடுமை!

கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் பசவராஜ் பொம்மை தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் கதறி அழுத வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அவரின் அழுகைக்கான காரணம் குறித்து தற்போது அறிந்து கொள்ளலாம்.

எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அடுத்த முதல்வர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. முதல்வர் ரேஸில் இருந்தவர்களை பின்னுக்குத் தள்ளி, பாஜக தலைமையின் அபிமானத்தை பூர்த்தி செய்து முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் பசவராஜ் பொம்மை, இவர் முன்னாள் முதல்வரான எஸ்.ஆர். பொம்மையின் மகனாவார். அவருக்கு வயது 61.

கர்நாடகாவில் பெரும்பான்மையாக விளங்கும் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவரான பசவராஜ் பொம்மையை, 2008 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஜனதா கட்சியிலிருந்து பாஜகவுக்கு அழைத்து வந்தவர் எடியூரப்பா தான். இருப்பினும் எடியூரப்பா பாஜகவில் இருந்து முன்னர் விலகிய போது, பசவராஜ் பொம்மை பாஜகவில் இருந்து விலகவில்லை. கட்சியில் மெதுவாக வளர்ந்து, உயர்ந்து மாநில உள்துறை அமைச்சராக உயர்ந்தவர் தற்போது முதல்வராகவும் உயர்ந்திருக்கிறார்.

மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவரான பசவராஜ் பொம்மையின் மற்றொரு முகம் குறித்து தற்போது வெளிப்பட்டிருக்கிறது.

ட்விட்டரில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ ஒன்றில் பசவராஜ் தனது குடும்பத்தினருடன் பொதுவெளியிலேயே கதறி அழுகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் பகிர்ந்திருக்கும் அந்த வீடியோ தற்போது பலரால் பார்க்கப்பட்டு வருகிறது.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் பசவராஜ் பொம்மை அவரது வீட்டில் வளர்த்து வந்த செல்லப்பிராணியான நாய் ஒன்று மரணம் அடைந்தது. நாயின் இழப்பை தனது குடும்ப உறுப்பினர் ஒருவரின் இழப்பாக கருதிய பசவராஜ் பொம்மை, அந்த நாய்க்கு இறுதிச் சடங்குகளை மேற்கொள்கிறார். மேலும் பொதுவெளியில் பசவராஜ் பொம்மை, அவரின் மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நாயின் சடலத்தை தடவிக் கொடுத்து கதறி அழுகின்றனர்.

பின்னர் நாயின் உடல் முழுவதும் இறுதியாக ஒரு முறை தடவிக் கொடுத்த பசவராஜ் பொம்மை நாய்க்கு முத்தம் கொடுத்துவிட்டு மீண்டும் அழுகிறார். வாயில்லா ஜீவராசியின் மீது அவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இந்த வீடியோ தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒரு விலங்கின ஆர்வலர் கர்நாடகாவின் முதலமைச்சராக கிடைத்திருப்பது நமக்கெல்லாம் நல்ல விஷயம் என்று அந்த பத்ரிகையாளர் குறிப்பிட்டுள்ளார்.

மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரியான பசவராஜ் பொம்மை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us