மோடிக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்; அதிரடி அறிவிப்பு!

மிக இளவயது மத்திய அமைச்சர் என்ற பெருமை பெற்றிருந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த பாபுல் சுப்ரியோ திடீரென அரசியலில் இருந்தே விலகுவதாக ஃபேஸ்புக்கில் அறிவித்துள்ளார். தனது எம்.பி பதவியையும் ராஜினாமா செய்யப்போவதாக அவர் அறிவித்துள்ளது மேற்குவங்க அரசியலில் பரபரப்பை கூட்டியுள்ளது.

பாடகர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டு பின்னர் அரசியலுக்குள் நுழைந்தவர் கொல்கத்தாவைச் சேர்ந்த பாபுல் சுப்ரியோ, வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி மீது ஈர்ப்பு கொண்ட சுப்ரியோ 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு இரு மாதங்களுக்கு முன்னர் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேற்குவங்கத்தில் பிரபலமானவராக இருந்ததால் அவருக்கு அசான்சோல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த முதல் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பாபுல் சுப்ரியோ அத்தேர்தலில் வெற்றி பெற்றார்.

இப்போது பாஜக அங்கு எதிர்கட்சி அந்தஸ்துடன் இருந்தபோதிலும் பாபுல் சுப்ரியோ வெற்றி பெற்றபோது மொத்தமே அங்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் பாஜகவுக்கு இருந்தனர். இதனையடுத்து 2014-ல் மத்திய அமைச்சரவையில் பாபுல் சுப்ரியோவுக்கு இடம் கிடைத்தது. தொடர்ந்து 7 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த சுப்ரியோ இந்த ஜூலை மாத தொடக்கத்தில் மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் திடீரென அரசியலில் இருந்தே விலகுவதாக பாபுல் சுப்ரியோ ஃபேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.

தனது விலகல் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள சுப்ரியோ, நான் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் என வேறு எந்தக் கட்சிக்கும் செல்லப்போவதில்லை எனவும் நான் ஒரே அணி வீரன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகப்பணி செய்வதற்கு அரசியலில் இருக்க வேண்டும் என்பதில்லை. முன்னதாக வங்கிப்பணியினை விட்டுவிட்டு பாடகராக மாறினேன். இப்போது அரசியலில் இருந்து விலகும் போதும் அதே மனநிலையை உணர்கிறேன். விரைவில் எம்.பி பதவியையும் ராஜினாமா செய்துவிடுவேன்.

கடந்த சில நாட்களாகவே அரசியலில் இருந்து விலகும் முடிவு குறித்து பாஜக மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்தேன். எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோருக்கு எனது நன்றிகள்” என பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

Contact Us