கிண்டல் செய்ததால் கொலை: சிறுவன் உட்பட 5 பேர் கைது

 

ஆந்திரா மாநிலம் பெடமாண்டி போலவரம் பகுதியை சேர்ந்த ராஜாபாபு (24). இவர் தனது நண்பர் காசிசீனு (23) என்பவருடன் சேர்ந்து கடந்த 29ம் தேதி மாலை, ஏனாம் புறவழிச்சாலையில் உள்ள மதுபான கடைக்கு எதிரே உள்ள இடத்தில் மதுபானம் குடித்துள்ளார். இவர்கள் பக்கத்தில் 5 பேர் கொண்ட கும்பல் மதுபானம் குடித்து கொண்டிருந்தது.

அப்போது எதிர் கும்பலில் இருந்த ஒரு வாலிபரின் முடியை பார்த்து ராஜாபாபு கிண்டல் செய்துள்ளார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த 5 பேர் கொண்ட கும்பல், பீர் பாட்டில், கத்தி உள்ளிட்டவையால் ராஜாபாபு மற்றம் காசிசீனுவை சராமாரியாக குத்தினர்.

இதில், ரத்த வெள்ளத்தில் ராஜாபாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காசிசீனுவுக்கு வயிற்றில் கத்தி குத்து விழுந்தது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏனாம் போலீசார், காசிசீனுவை மீட்டு காக்கிநாடா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பீர் பாட்டில், கத்தியால் குத்திய 5 பேர் கொண்ட கும்பலிடம் இன்ஸ்பெக்டர்கள் சிவகணேஷ், அறிவுச்செல்வம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

கொலை செய்தது, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த பட்னாலா சின்ன சத்தியநாராயணன் (23), தம்மேன்னா சுப்பாராவ் (28) கேத்கிரி மணிகண்டன் (23), பெத்துரெட்டி ரோகித் (19) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. கொலைக்கு பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

சாலையோரம் மதுக்குடிக்கும் போது, 17 வயது சிறுவனின் தலைமுடியை, ராஜாபாபு கேலி செய்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, நான்கு பேரையும், ஏனாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவன், கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

Contact Us