நயாகரா ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்… மாயமான இளைஞர்

 

நயாகரா ஆற்றில் நீச்சலில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இன்னொருவர் மாயமானதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 20 வயது கடந்த இருவரும் கிரேட்டர் ரொறன்ரோவில் நண்பர்களுடன் மலையேறும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், பின்னர் அந்த இருவரும் நயாகரா ஆற்றில் இறங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.

அப்போது ஆற்றில் கடும் நீரோட்டம் இருந்ததாகவும் பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலையில் சுமார் 5 மணியளவில் 911 இலக்கத்திற்கு அழைத்து தகவல் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தகவலை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் ரொறன்ரோவில் குடியிருக்கும் பெண் ஒருவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளனர். முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இறந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. குறித்த பெண்ணுடன் நீச்சலில் ஈடுபட்டிருந்த இளைஞர், ஆபத்தில் இருந்த பெண்ணை காப்பாற்ற முயன்றதாகவும் ஆனால் ஆற்றின் நீரோட்டத்தில் சிக்கி அவர் மாயமானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மாயமான இளைஞருக்காக தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. விபத்தில் சிக்கி மரணமடைந்த பெண் மற்றும் அவருடன் ஆற்றில் நீச்சலிட்டு மாயமான இளைஞர் தொடர்பில் பெயர் உள்ளிட்ட தகவல்களை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.

Contact Us