5 மொழிகளில் தயாராகும் சன்னிலியோனின் முதல் தமிழ் படம்.. விட்டா….. நயன்தாராவுக்கு சவால் விடுவாங்க போல!

பிரபல நடிகையான சன்னி லியோன் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னதாக ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன் தற்போது முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகிவரும் ஷெரோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதுதவிர சசிகுமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகி வரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான ‘ஷெரோ’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படத்தின் நாயகியான நடிகை சன்னிலியோன் மற்றும் இயக்குனர் ஸ்ரீஜித் இருவரும் இணைந்து அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன், “ஷெரோ, ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் படம். இப்படத்தில் சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார்.

விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வரும் அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், மற்றும் தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. இப்படத்திற்காக நடிகை சன்னி லியோன் கடுமையாக உழைத்துள்ளார்” என கூறியுள்ளார். படம் குறித்து பேசிய நடிகை சன்னி லியோன், “ஷெரோ போன்ற சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இப்படத்தின் மூலமாக பல மொழிகளையும், நடிப்பின் பல்வேறு பரிமாணங்களையும் கற்றுக்கொள்ள முடிந்தது.

கேரளாவின் அழகியல் சார்ந்த இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. என்னுடைய கலைப் பயணத்தில் நான் நடித்த சுவராசியமான படங்களில் ஷெரோவும் ஒன்று. சண்டைக்காட்சிகளில் நடிக்கும் போது படக்குழுவினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்” என கூறினார். சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள முதல் தமிழ் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நயன்தாரா ஏற்கனவே நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம் தேர்வு செய்து நடிப்பார். அதைப்போல் சன்னி லியோன் தற்போது தமிழில் முதல் படத்திலேயே முயற்சி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us