புதிய போருக்கு தயார்; தலிபான்களுக்கு எதிராக ஆப்கானில் ஓங்கி ஒலித்த முதல் குரல்!

 

ஆப்கான் முழுவதையும் தலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், தலிபான்களிடம் சரணடையமாட்டேன் அவர்களுக்கு ஒருபோது தலைவணங்க மாட்டோம். இன்னொரு புதிய போருக்கு தயாராகவே இருக்கிறோம் என்று ஆப்கான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே (Amrullah Saleh)தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், நான் என்றும் எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் தலிபான் தீவிரவாதிகளுக்குத் தலைவணங்க மாட்டேன். எனது தலைவர் அகமது ஷா மசூதின் மாண்புக்கும் எப்போதும் நான் துரோகம் இழைக்க மாட்டேன். என் வார்த்தைகளை நம்பிய லட்சக்கணக்கான மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்க மாட்டேன். தலிபான்களுடன் ஒரே கூரையின் கீழ் ஒருமித்து வேலை செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று ஆப்கனின் வடகிழக்குப் பகுதியில் இந்துகுஷ் மலைகளின் ஊடே உள்ள பாஞ்ஷிர் பகுதியில் தலிபான் எதிர்ப்புத் தலைவர் அகமது ஷா மசூத்துடன், முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே (Amrullah Saleh) எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியானது.

இந்நிலையில் இன்று அவர் இத்தகைய ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதேவேளை தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி வெற்றிக் களிப்பில் இருக்கும் சூழலில் அவர்களுக்கு எதிராக முதல் கொரில்லா இயக்கக் குரல் ஓங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Contact Us