சென்னையில் நள்ளிரவு அதிர்ச்சி; நிர்வாண சைக்கோ செய்யும் சேட்டைகள்!

சென்னை ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே சாலை, ஜெ.ஜெ.தெரு, அம்புஜம்மாள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் நிர்வாணமாக வலம் வருவதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணா மேம்பாலத்தின் கீழும், ஆழ்வார்ப்பேட்டை பாலத்துக்கு கீழும் மர்ம நபர் சுற்றித் திரிவது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்கள் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதலில் ஈடுபடுகிறார்.

பொதுமக்கள் பிடிக்க முயற்சிக்கும் போது, அவர்கள் மீதும் கற்களை வீசி தாக்கி விட்டு பயங்கர சத்தத்துடன் சிரிக்கவும் செய்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனால் மர்ம நபரை நெருங்கவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக நிர்வாண சைக்கோவின் அட்டகாசங்கள் தொடர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆழ்வார்ப்பேட்டையில் தற்போது வரை விலை உயர்ந்த 35 கார்களை சேதப்படுத்தி இருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகர் சுமதியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களை நிர்வாண சைக்கோ கற்களால் தாக்கி சேதப்படுத்தி இருக்கிறார். இதையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சுமதி புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் கண்களில் சிக்காமல் இருந்து வந்த மர்ம நபர், சமீபத்தில் தென்பட்டுள்ளார். அப்போது அவரை விரட்டி பிடிக்க முயற்சிக்கையில் வேகமாக தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த விஷயத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு தனிப்படை அமைத்து விரைவாக தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிர்வாண மர்ம ஆசாமியின் தொல்லையால் இரவு நேரத்தில் வெளியில் வரவே அச்சமாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

Contact Us