நான் பணம் எடுத்து சென்றதாக கூறப்படுவது முற்றிலும் பொய்: மீண்டும் ஆப்கான் திரும்புவேன்

 

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற பின் முதல் முறையாக அதிபர் அஷ்ரப் கனி காணொளி மூலம் தன்னை பற்றிய செய்தியை வெளியிட்டு உள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, அங்கு தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையிலான போர் தீவிரமான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலீபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலீபான்கள் வசமானது. தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனியையும் அவரது குடும்பத்தினரையும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்றதாக தகவல் வெளியானது. தப்பி செல்வதற்காக விமானப்படை தளத்துக்கு 4 கார்கள் நிறைய பணத்துடன் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தப்பி சென்றார். 4 கார்களில் கொண்டு வரப்பட்ட பணத்தை ஹெலிகாப்டரில் திணித்தனர்.

ஆனால் ஒரு அளவுக்கு மேல் அவர்களால் பணத்தை ஹெலிகாப்டருக்குள் ஏற்ற முடியவில்லை. எனவே கொஞ்சம் பணக்கட்டுகளை ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்த ஓடு தளத்திலேயே வீசிவிட்டு அஷ்ரப் கனி தப்பி சென்றதாக ரஷிய செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்து இருந்தது. ஆனால் அஷ்ரப் கனி ஒரு காணொளி செய்தியில் தனது மவுனத்தைக் கலைத்து உள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி சென்ற பின் முதல் முறையாக அவர் வீடியோ மூலம் தன்னை பற்றிய செய்தியை வெளியிட்டு உள்ளார். துபாயில் இருந்து முகநூலில் வெளியிட்ட காணொளி செய்தியில் அவர் பேரழிவுகளைத் தவிர்ப்பதற்காக ஐக்கிய அரபு எமிரேட்சில் இருப்பதாகவும், நாடு திரும்ப “பேச்சுவார்த்தையில்” ஈடுபட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது காபூலில் தங்கியிருந்தால் பெரிய வன்முறையை சந்திக்க வேண்டியதிருக்கும். தலீபான்களுக்கு எதிராக போராடிய ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கு நன்றி. தலீபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகள் எந்த முடிவையும் எட்டவில்லை. இது எங்கள் தோல்வி என்று அவர் கூறினார்.

தலீபானுக்கு அதிகாரத்தை அமைதியாக மாற்ற விரும்பினேன் ஆனால் எனது விருப்பத்திற்கு மாறாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என கூறினார்.நான்கு கார்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் முழுவதும் பணத்துடன் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்து உள்ளார்.

Contact Us