சிக்கியது ஆண் அல்ல சிறுமி என்றதும் அதிர்ந்த போலீசார்

 

இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளி பேருந்தை காலையில் வந்து எடுக்க நினைத்த போது அதிலிருந்து மூன்று இளைஞர்கள் தப்பி ஓடியிருக்கின்றனர். நான்காவதாக ஓட நினைத்து ஒருவர் மட்டும் சிக்கியிருக்கிறார். போலீஸ் விசாரணையில் சிக்கிய அந்த நபர் ஆண் அல்ல 16 வயது சிறுமி என்று தெரிய வந்திருக்கிறது.

ஆண்களைப் போலவே உடை அணிந்துகொண்டு முடி வெட்டிக் கொண்டு இருந்ததால் அந்த சிறுமியை எல்லோரும் ஆண் என்றே நினைத்தனர். எங்கிருந்து வருகிறாய் உன் வீடு எங்கே இருக்கிறது என்று போலீசார் விசாரித்த போது, ஜாம்பஜார் மீர்சாகிப்பேட்டை சாலையோரத்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். தப்பி ஓடிய மூன்று பேரும் தன் நண்பர்கள் என்றும் கார்த்திக், நிஜாம், தேவா ஆகிய அந்த மூன்று நண்பர்களுடன் தான் எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

நண்பர்களுடன் ஈசிஆர் சென்று டிக் டாக் வீடியோ எடுத்து விட்டு திரும்பி வந்தபோது விருகம்பாக்கம் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சிக்கி கொண்டோம். தேவா மீது குற்ற வழக்கு இருப்பதால் போலீசார் பைக் மற்றும் மொபைலை பிடுங்கிக்கொண்டு காலையில் வந்து கையெழுத்து போட்டுவிட்டு வாங்கிக் கொள்ள சொல்லிவிட்டார்கள். அப்போது மூன்று பேருடன் நின்று கொண்டிருந்த என்னையும் ஆண் என்று அவர்கள் நினைத்துவிட்டனர். அவர்களுக்கு நான் சிறுமி என்பது தெரியவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

உன் சொந்த ஊர் எது என்றம், திருச்சி தான் எனக்கு சொந்த ஊர். அம்மாவும் அப்பாவும் பிரிந்து வாழ்கிறார்கள். இதையடுத்து சில காலம் நான் அப்பாவுடன் தங்கியிருந்து வாழ்ந்து வந்தேன். அப்போது அப்பாவைப் பார்த்து பார்த்து ஒரு ஆண் போலவே என்னை பாவித்துக்கொண்டேன். அதனால எப்போதும் ஆண் நண்பர்களுடன் தான் சேர்ந்து இருப்பேன். அதனால் தான் என் முடியையும் ஆண் போலவே கொட்டிக் கொண்டிருக்கிறேன். அதனால் ஆண் நண்பர்களுடன் சுற்றும்போது யாரும் கண்டுகொள்வதில்லை என்றிருக்கிறார்.

மேலும் நடத்திய விசாரணையில், பைக்கை பிடுங்கி வைத்துக் கொண்டதால் அரும்பாக்கத்தில் சுவர் ஏறி குதித்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி வேனுக்குள் படுத்து தூங்கினோம் என்று சொல்லியிருக்கிறார். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவர் கஞ்சா போதைக்கு அடிமையாக இருப்பதும், அந்த மூன்று நண்பர்களுடன் சேர்ந்து எப்போதும் கஞ்சா அடித்துக் கொண்டு திரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து திருச்சியில் உள்ள அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வரவழைக்கப்பட்டு அவரிடம் சிறுமியை ஒப்படைத்தனர். தப்பியோடிய மூன்று இளைஞர்களையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர்.

Contact Us