பாலியல் தொழிலுக்கு அழைக்கப்பட்ட `வெல்கம் கேர்ள்ஸ்’; அடி வாங்கிய ஈவென்ட் மேனேஜர்; என்ன நடந்தது?

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (எ) ராஜா. இவர் `கலக்கல் ஈவென்ட் மேனேஜ்மென்ட்’ என்ற பெயரில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தித் தரும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இவரது நிறுவனத்தில் `வெல்கம் கேர்ள்ஸ்’ என்ற பெயரில் பல ஊர்களைச் சேர்ந்த இளம்பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர் தனது நிறுவனத்தில் பணிபுரியும் சில பெண்களை மது குடிக்க வைத்து, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் டார்ச்சர் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், ராஜாவின் டார்ச்சர் தாங்க முடியாத தஞ்சாவூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வரின் தனிப்பிரிவுக்கும், தஞ்சாவூர் காவல் கணிப்பாளருக்கும் மனு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த மனுவில், “கும்பகோணத்தில் என் பெற்றோருடன் வசித்து வந்தேன். அங்கு உள்ள ஓட்டல் ஒன்றில் கணக்கராக பணியாற்றிய நான், இடையில் சுப நிகழ்ச்சிகளில் `வெல்கம் கேர்ள்’ ஆகவும் பணியாற்றி வந்தேன். தோழி ஒருவர் மூலம் கிடைத்த வாய்ப்பில், கடந்த 2020 ஜனவரியில் புதுவயல் என்னும் பகுதியில் திருமண வரவேற்பு ஒன்றில் `வெல்கம் கேர்ள்’ ஆகப் பணியாற்றினேன். அப்போதுதான் ராஜாவின் அறிமுகம் கிடைத்தது. `விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பில் நிற்க நிறைய இளம் பெண்கள் தேவைப்படுகிறார்கள், தேவைப்பட்டால் உன்னைக் கூப்பிடுகிறேன்’ என்று என்னுடைய தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். மேலும் அந்த நிகழ்வில், சாக்கோட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் ரைட்டர் மாயவதன் என்பவரை, தன் நண்பர் என அறிமுகம் செய்து வைத்தார்.

அடுத்த இரண்டு நாள்கள் கழித்து எனக்கு போன் செய்த ராஜா, “பெரிய, பெரிய வி.ஐ.பிகள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களுடன் நீ அக்ரீமென்ட் போட்டு ஒரு மாதம், இரண்டு மாதம் தங்கி இருந்தால், லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்” என்று சொல்லி பாலியல் தொழிலுக்கு அழைத்தார். நான் போனை கட் செய்துவிட்டேன். அதன் பின்பும், எனக்கு அடிக்கடி போனில் அழைத்து தொல்லை கொடுத்தார். ராஜா என்னைப் போல பல ஆதரவற்ற பெண்களையும், கணவரால் கைவிடப்பட்ட பெண்களையும் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளார். சாக்கோட்டை ரைட்டர் மாயவதன் என்னிடம், “ராஜா சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்துகொள்” என்று கூறினார்.

 தவறு என்று தெரிந்தும் ராஜா செய்யும் கேவலமான செயலுக்கு மாயவதன் உடந்தையாகச் செயல்பட்டு வருகிறார். இவர்களை கைது செய்து விசாரித்தால் பல உண்மைகள் வெளியே தெரியவரும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, சாக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இரண்டு பிரிவுகளின் கீழ் ராஜா மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையேதான், ஈவென்ட் மேனேஜ்மென்ட் ராஜாவை அரை நிர்வாண கோலத்தில் பெண்கள் தாக்குவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வீடியோவில் ராஜா நடுவே நிற்க, ஆண்கள் சிலர் வீடியோ எடுக்கின்றனர். மூன்று பெண்கள் ராஜாவின் கன்னத்தில் அறைகின்றனர்.

 

`நான் நல்லா தானே இருந்தேன்… என்னை ஏன்டா இப்படி பண்ணுன?’ என்று ராஜாவின் கன்னத்தில் அறைந்து விட்டு ஒரு பெண் செல்ல, மற்றொரு பெண், `என்னை ஏன்டா தப்பா படம் எடுத்து வச்சிருக்க…’ என்று சொல்லி பளாரென்று கன்னத்தில் அறைவிட்டுச் செல்கிறார். இடையே ஆண் ஒருவர், `நல்லா அடி, இல்லைன்னா உனக்கும் அடி விழும்’ என்று கூறுகிறார். தொடர்ந்து, ஆண்களும் ராஜாவைத் தாக்குகின்றனர். இந்த வீடியோ தற்போது வேகமாகப் பரவி வருகிறது

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, “ராஜாவுக்கும் இளம்பெண்ணுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்திருக்கிறது. இதுபற்றி அந்தப் இளம்பெண் தன் தோழியிடம் சொல்ல, தோழி தன் கணவரிடம் கூறியிருக்கிறார். அவர் தன்னுடைய சில நண்பர்களை அழைத்துக் கொண்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிபுதூருக்கு ராஜாவை நிகழ்ச்சி ஒன்றுக்கு 3 வெல்கம் கேர்ஸ்ஸுடன் வரவழைத்து, அந்தப் பெண்களை வைத்தே ராஜாவை அடிக்க வைத்து வீடியோ எடுத்துள்ளனர்.

அப்போது ராஜாவிடம் இருந்து நகை, பணத்தை பிடுங்கி இருக்கின்றனர். அதோடு, வீடியோவை வெளியிடாமல் இருக்க மேலும் பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர். இதையெல்லாம் வெளியே சொல்ல முடியாமல் தவித்த ராஜா, போலீஸாருக்கு தபால் மூலம் மனு அனுப்பினார். அதன் பிறகுதான் மாயவதன் என்ற போலீஸ், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணுக்கு போன் செய்து, `ராஜாவிடம் இருந்து அடித்துப் பிடிங்கிய ரூ. 45,000-த்தைக் கொடு’ என்று பேசியிருக்கிறார். முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இளம்பெண் அனுப்பிய புகாரின் பேரில் விசாரித்து ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் பேசும்போது, “இந்தப் புகாரில் காவலர் ஒருவரும் சம்பந்தப்பட்டிருப்பதால், காவல்துறை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக நிற்கிறது. மேலும், இந்தப் பெண்கள் `வெல்கம் கேர்ள்ஸ்’ என்பதால், பொதுபுத்தியின் அணுகுமுறையின் படி அவர்கள் மீது அவதூறு சொல்வதும் காவல்துறைக்கு எளிதாகிவிடும். எனவே, உண்மையில் நடந்தது என்ன என்பதை பெண் நலச் செயற்பாட்டாளர், மக்கள் வழக்கறிஞர் உள்ளிட்டவர்கள் அடங்கிய ஒரு குழு அமைத்து விசாரித்தால்தான் நடந்திருக்கும் குற்றங்கள் வெளிவரும்” என்கிறார்கள்.

Contact Us