பெங்களூரில் தனிமையில் ரஜினி… எடுக்கப்போகும் முடிவு என்ன?!

 

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு லக்னோவில் நடந்து வருகிறது. ரஜினி நடிக்கவேண்டிய காட்சிகள் மொத்தமும் சில மாதங்களுக்கு முன்பே எடுத்து முடித்துவிட்டதால், லக்னோவுக்கு அவர் செல்லவில்லை. இந்நிலையில் லக்னோவில் இருக்கும் ‘அண்ணாத்த’ யூனிட், இன்னும் சில தினங்களில் சென்னை திரும்புகிறது. அத்தோடு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முழுவீச்சில் நடக்க இருக்கின்றன.

இதற்கிடையே ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படத்தில் நடிப்பதற்குள் இமயமலைக்கு சென்று சில வாரங்கள் தியானம், யோகா செய்துவிட்டு வருவது ரஜினியின் வழக்கம். ஆனால், இம்முறை கொரோனோ லாக்டெளன் சூழலால் இமயமலைக்கு செல்லவில்லை. பெங்களூருவில் உள்ள அவரது வீட்டுக்குத் தனியாகச் சென்றிருக்கிறார் ரஜினி. அவருடன் அந்த வீட்டில் யாரும் இல்லையாம். இன்னும் சில நாட்கள் அங்கே தியானத்தில் இருந்துவிட்டு சென்னை திரும்ப இருக்கிறாராம் ரஜினி.

இதற்கிடையே ரஜினியின் அடுத்த படத்தை ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதால், ரஜினி அதில் நடிக்க சம்மதித்துள்ளார். தேசிங்கு சொன்ன கதையில் ஒரு ஃப்ளாஷ்பேக் போர்ஷன் இருக்கிறதாம். மன்னர் காலத்து பீரியட் போர்ஷனான அது படத்தில் கிட்டத்தட்ட அரைமணி நேரம் இடம்பிடிக்கும் முக்கியமான பகுதியாம். அதை மட்டுமே படமாக்க கிட்டத்தட்ட நூறு கோடிரூபாய் ஒதுக்க வேண்டி வருகிறதாம். அதனால்தான் தயாரிப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகாமல் இருக்கிறது என்கிறார்கள்.

”ஃப்ளாஷ்பேக் போர்ஷனுக்கே நூறு கோடி ஒதுக்கினால் படத்தின் பட்ஜெட் எகிறிடும்” என தயாரிப்பாளர்கள் தயங்குவதாகச் சொல்கிறார்கள். அதனால் ஃப்ளாஷ்பேக் போர்ஷனின் நீளத்தைக் குறைத்து பத்து கோடிக்குள் அடக்கமுடியுமா என்பது குறித்தான விவாதங்கள் நடந்துவருவதாகத் தெரிகிறது.

தியானம் முடிந்து பெங்களூருவில் இருந்து சென்னை வந்ததும் தயாரிப்பாளரை ரஜினி இறுதிசெய்யக்கூடும் என்கிறார்கள்.

Contact Us