உமது காருடன் வைத்து உன்னை சாம்பலாக்கி விடுவேன் – ரிஷாத் அச்சுறுத்தியதாக கூறப்படும் வைத்தியர் வாக்குமூலம்

 

முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதின் மிரட்டியதாக கூறப்படும் சிறைச்சாலை வைத்தியர் வழங்கியுள்ள வாக்குமூலத்தை பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, கடந்த 15ஆம் திகதி வழக்கம்போல நான், சிறைச்சாலை மருந்தகத்தில் மருந்து கொடுத்துக் கொண்டு இருந்தேன். கோவிட் – 19 நிலைமை காரணமாக மருந்தகத்துக்குள் எவரையும் அனுமதிக்காது, அங்குள்ள ஜன்னல் வழியேயே நோயாளர்களான கைதிகளை பரீட்சித்து மருந்து கொடுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொருவராகவே அழைத்து மருந்து கொடுக்கப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் திடீரென அங்கு வந்த ரிஷாத் பதியுதீன், ‘நீங்கள் என்ன பெரிய டாக்டரா?, நான் எதற்காக இங்கு வந்துள்ளேன் தெரியுமா? உங்களை ஒரு மணி நேரத்துக்குள் என்னால் இடமாற்றம் செய்ய முடியும். எனக்கு ஆளும், எதிர்க்கட்சிக்குள் எவ்வளவு ஆதரவு உள்ளது தெரியுமா? எனக்கு வேண்டிய வைத்தியரை நான் இங்கு அழைத்து வரலாம். உமது காருடன் வைத்து உன்னை சாம்பலாக்கி விடுவேன். அப்படிச் செய்தால் உங்கள் மனைவி, பிள்ளைகள் அனாதரவாகி விடுவார்கள். ஞாபகம் வைத்துக் கொள் நான் ரிஷாத் பதியுதீன்’ என மிரட்டியதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் வேறொரு கைதி இருந்துள்ள நிலையில் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து சாட்சியம் பதிவு செய்ய பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளனர்.

அதன்படி, இன்றைய தினம் குறித்த கைதியிடம் வாக்குமூலம் பெற விசாரணையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த கைதியை கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Contact Us