திருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை

 

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசி விஎஸ்வி காலனியை சேர்ந்தவர் விஜயன். இவர் பின்னலாடை நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று பிள்ளைகள் வெளியே சென்றிருந்த நிலையில், பிரியா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது செல்போனுக்கு கணவர் அழைத்தபோது நீண்டநேரமாக அழைப்பை ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், அருகில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு வீட்டில் பார்க்கும்படி கூறியுள்ளார். இதனால் பக்கத்து வீட்டினர் சென்று பார்த்தபோது, பிரியா வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து விஜயன் அளித்த தகவலின் பேரில், திருப்பூர் மாவட்ட எஸ்.பி சசாங் சாய் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொலையாளிகளின் கைரேகை பதிவுகளும் சேகரிக்கப்பட்டது.

தொடர்ந்து, பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அவினாசி போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பிரியாவை கொலை செய்து, அவர் அணிந்திருந்த நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்துள்ளது.

Contact Us