இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம்; தலிபானின் திடீர் அறிவிப்பால் அதிர்ச்சி

 

2001 இடம்பெற்ற அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கும், ஒசாமா பின்லேடனுக்கும் தொடர்பில்லை. அதற்கான ஆதாரமும் இல்லை என்று தலிபான் செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், கிட்டதிட்ட 4,500 அமெரிக்கர்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதுமட்டுமின்றி மற்ற நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அமெரிக்க படை விமானம் மற்றும் இதர விமானங்கள் மூலம் அழைத்து செல்லப்படுகின்றனர்.

அமெரிக்காவை பொருத்தமட்டில் சுமார் 1,500 அமெரிக்கர்கள் மட்டுமே இன்னும் ஆப்கானில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்ட அறிவிப்பில்,

‘காபூல் விமான நிலையத்தின் வெளிப்புற வாயிலான ஏபி கேட், கிழக்கு கேட் அல்லது வடக்கு கேட் வழியாக அமெரிக்க மக்கள் உடனடியாக வர வேண்டும். மற்ற வாயில்களில் செல்ல வேண்டாம். காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர், நேற்று ஆப்கானிஸ்தான் நிலைமை, இருதரப்பு உறவுகள் குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை பொருத்தமட்டில், 11 நேபாள நாட்டினர் உட்பட 24 இந்தியர்கள் இன்று இந்திய விமானப்படை விமானம் மூலம் காபூலில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலிபான் செய்திதொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் (zabihullah mujahid), என்பிசி என்ற செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,

‘கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் (9/11) சம்பவத்தில் ஒசாமா பின்லேடன் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், ஆப்கானுக்கு எதிராக தொடுக்கப்பட்ட 20 ஆண்டு போருக்குப் பிறகும், எந்த ஆதாரமும் வெளியிடவில்லை’ என்றும் அவர் கூறினார்.

இதேவேளை ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் உள்ளிட்ட வெளிநாட்டினர் வரும் 31ம் தேதிக்குள் வெளியேற தலிபான்கள் அறிவுறுத்தி வந்த நிலையில் அங்குள்ள நிலைமையை கருத்தில் கொண்டு 31ம் தேதிக்குப் பின்னரும் கூட ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறலாம் என்று தலிபான்கள் பச்சை கொடி காட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஜெர்மனி நாட்டு தூதர் மார்கஸ் போட்ஸெல் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நான், தலிபான்களின் அமைதிப் பேச்சுவார்த்தை குழுவில் உள்ள ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாயிடம் பேசினேன். அவர், உரிய ஆவணங்கள் உடைய ஆப்கன் மக்கள் வரும் 31ம் தேதிக்குப் பின்னரும் கூட வர்த்தக விமானங்கள் மூலம் வெளியேற அனுமதிக்கிறோம் என்று உறுதியளித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தலிபான்களின் இந்த அறிவிப்பால், ஆப்கான் நிலைமை படிப்படியாக சரியாகும் என்று சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.

Contact Us