20 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை நீக்கிய நாடு; ஆனால் இது கட்டாயம்

 

20 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை சவுதி அரேபியா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் சவுதி வெளிவிவகார அமைச்சகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பரவல் தொடர்பாக 20 நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கப்படுகிறது. இருப்பினும் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே சவுதிக்குள் அனுமதிக்கப்படுவர்கள் என குறிப்பிட்டுள்ளது.

உலக அளவில் கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பரவல் கடுமையாக இருந்த நிலையில் ஐக்கிய அமீரகம், எகிப்து, லெபனான், அமெரிக்கா, துருக்கி, பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி, அயர்லாந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், பிரேசில், அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சவுதி பயணத் தடை விதித்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அந்நாடுகள் மீதான பயணத் தடையை சவுதி நீக்கியுள்ளது. எனினும் டெல்டா மாறுபாடு காரணமாகப் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

டெல்டாவின் தாக்கம் பிரித்தானியா, ஜேர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் இதன் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் ஒரு தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மார்ச் 14, 2020 முதல் சவுதி அரேபியாவிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் அனைத்தும் முதன் முதலில் நிறுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜனவரி 5ம் திகதி முதலே, சவுதி அரேபியா தனது எல்லைகளை திறந்தமை குறிப்பிடத்தக்கது.

Contact Us