சுற்றி வளைத்த தாலிபான்கள்… தப்புவதற்காக ஆப்கன் விமானப்படை விமானிகள் எடுத்த முடிவு

 

ஆப்கானிஸ்தான் அரசு தாலிபான்களிடம் வீழ்ந்த அந்த இரவு, ஒரு கூட்டம் விமானப்படை விமானிகள் விமான தளத்தில் இருந்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நேரத்தில் தங்களை தாலிபான்கள் கொன்றுவிடுவார்கள் என்ற நிலையில், கையில் ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், என்ன செய்வது என்று தெரியாமல் திகிலுடன் இருந்திருக்கிறார்கள்.

கடிகாரம் எழுப்பிய சத்தத்தை விட இதயத்துடிப்பின் சத்தம் அதிகரிக்க, சட்டென ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள் அவர்கள். 12 விமானிகளும் ஒரு விமான ஊழியருமாக விமானம் ஒன்றில் ஏறி, தாங்கள் போர் பயிற்சி பெற்றபோது, உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவோம் என உறுதியளித்த தாய் நாட்டை விட்டு விட்டு, உயிர் தப்ப பறந்திருக்கிறார்கள்.

நாங்கள் தாலிபான்களைக் கொன்றிருக்கிறோம், அவர்களிடம் நாங்கள் சிக்கினால் நிச்சயம் எங்களையும் கொன்றுவிடுவார்கள் என்று கூறும் அவர்களில் ஒருவர், தாங்கள் தஜிகிஸ்தான் நாட்டில் சென்று இறங்கியதாக தெரிவிக்கிறார்.

அங்கே அவர்கள் சுதந்திரமாகத்தான் இருக்கிறார்கள். ஆனாலும் ஒருவர் கூட தங்கள் சீருடையைக் கழற்றவில்லை. காரணம், ரஷ்யாவின் உத்தரவின் பேரிலோ அல்லது புதிய காபூல் அரசுக்கு தாங்களும் ஆதரவு என்று காட்டுவதற்காகவோ எந்த நேரத்திலும் தாங்கள் தாலிபான்களிடம் தஜிகிஸ்தானால் ஒப்படைக்கப்படலாம் என்ற அச்சத்திலேயே இருக்கிறார்கள் அவர்கள்.

அவர்களில் சிலர் அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர்கள். ஆனாலும், அவர்கள் அமெரிக்காவிடம் உதவி கோரவில்லை. காரணம், ஆப்கன் இராணுவம் சண்டை போட முயற்சிக்காமலேயே தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டது என்று கூறியிருந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

ஆகவே, தாங்கள் கனடாவுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ள அவர்கள், கனடா அரசு தங்களுக்கு உதவவேண்டும் என்றும், தங்களை தஜிகிஸ்தானிலிருந்து வெளியேற்றி அழைத்துச் செல்லவேண்டும் என்றும் கனடா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Contact Us