சென்னை காப்பகத்தில் சிறுமி, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை – சகோதரருக்கு உடந்தையாக இருந்த பெண் நிர்வாகி

 

சென்னை பெரவள்ளூர் ஜவஹர் நகர் இயங்கிவரும் தனியார் காப்பகத்தில் முதியோர், சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் என 130 பேர் தங்கியிருக்கின்றனர். இந்த காப்பகத்தில் நிர்வாக செயலாளராக இருந்து வந்தவர் இசபல் ரிச்சர்சன்(56). இவர் தனது சகோதரர் பென்னர்ட் ரிச்சர்ட்சனை நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் அனுமதி இல்லாமல் காப்பகத்தில் தங்க வைத்திருக்கிறார்.

காப்பகத்தில் தங்கிய அவர் அங்கிருந்த 15 வயது சிறுமிக்கும் 20 வயது இளம் பெண்ணுக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். காப்பகத்தில் இருக்கிறோம் என்று முதலில் பொறுத்துப்போன அவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் காப்பகத்தின் கமிட்டி உறுப்பினர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

கமிட்டி உறுப்பினர்கள் மேற்கொண்ட விசாரணையில் புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காப்பக விதிகளை மீறி தனது சகோதரரை அனுமதித்ததற்காக இசபல் ரிச்சர்சன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பாலியல் தொல்லை கொடுத்த பென்னர்ச், அவரை காப்பகத்தில் தங்க அனுமதித்து அவருக்கு உடந்தையாக இருந்த இசபெல் ரிச்சர்ட்சன் ஆகியோர் மீது பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் கமிட்டி உறுப்பினர்கள்.

இதையடுத்து இசபெல் ரிச்சர்சனை கைது செய்தவுடன், பென்னர்ட் தலைமறைவானார். தீவிர தேடுதலில் அவரும் போலீசாரின் பிடியில் சிக்கியிருக்கிறார் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Contact Us