‘உங்களை வேட்டையாடுவோம்…’- காபூல் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு ஜோ பைடன் கடும் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இதுவரை கிடைத்த தகவல்படி, இந்த பயங்கரவாத தாக்குதலில் 72 பேர் இறந்திருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அமெரிக்க குடிமக்கள் சிலரும் இறந்திருப்பதாக அந்நாட்டு அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேசும்போது, ‘நாங்கள் இந்த சம்பவத்தை மறக்க மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை நாங்கள் வேட்டையாடுவோம். இதற்கு அவர்கள் தகுந்த விலையை கொடுத்தாக வேண்டும்’ என்று கடுமையாக பேசியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் ஆட்சி நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் தரப்பு, இதுவொரு தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கும் என்று சந்தேகிக்கிறது. இந்த தாக்குதல் நடப்பதற்கு முன்னரே காபூல் விமான நிலைய பகுதியில் பாதுகாப்பில் இருந்த அமெரிக்க தரப்பு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் அச்சுறுத்தல் இருப்பதால் அங்கிருந்து வெளியேறும்படி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Contact Us