சசிகலா, எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரணை நடத்த மனுதாக்கல்

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயான், உதயகுமார், சதீஷ் அலி, தீபு, சம்சீர், சந்தோஷ், மனோஜ், வாளையார் மனோஜ், திலிப் ஜாய் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் வழக்கின் விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பதாக வழக்கின் முக்கிய குற்றவாளியான சயான் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜ் அண்ணன் தனபால் ஆகியோர் கூறியிருக்கின்றனர். இதையடுத்து இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவை என்று நீலகிரி காவல்துறையினர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சயானிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றிருக்கிறது. கடந்த 17ஆம் தேதி அன்று சயானிடம் 3 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தியிருக்கின்றனர். இதையடுத்து 24ஆம் தேதி கனகராஜ் அண்ணன் தனபாலிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்துள்ளதால் வழக்கு தீவிரமடைந்து இருக்கிறது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சசிகலா உள்ளிட்ட பலரை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

கொடநாடு வழக்கின் சிபு, சந்தோஷ் சாமி, சம்சீர் அலி ஆகிய 3 குற்றவாளிகளின் தரப்பு வழக்கறிஞர் விஜயன் இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொடநாடு பங்களாவை பார்வையிட அனுமதி கேட்டு மனு அளித்து இருக்கிறோம். வழக்கில் குழப்பங்கள் அதிகரிப்பதால் சம்பவ இடத்தை பார்வையிட அனுமதி கோரி இருக்கிறோம் என்றார்.

அவர் மேலும், இந்த வழக்கில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார். சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று எங்கள் தரப்பில் கூறியிருக்கிறோம். அது குறித்து இன்னும் நீதிமன்றம் முடிவு எடுக்கவில்லை அதுவும் இரண்டொரு நாளில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. உயர்நீதிமன்றத்திலும் இந்த கோரிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.

Contact Us